ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Oct, 2017 | 7:38 am

மழையுடனான வானிலை குறைவடைந்ததை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் நீர் தேங்கியிருப்பதாக நீர்பாசனத் திணைக்களத்தின் நீரியல் கற்கை பிரிவின் பணிப்பாளர் பிறேமா ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

நில்வலா, களு மற்றும் களனி ஆறுகளின் நீர்மட்டம் இந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் பிறேமா ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, 06 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட மற்றும் காலி மாவட்டத்தில் நெலுவ ஆகிய பகுதிகளில் இரண்டாம் நிலைக்குரிய மண்சரிவு அபாய ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நுவரெலியா, இரத்தினப்புரி, களுத்துறை, கேகாலை, மாத்தளை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் முதலாம் நிலைக்குரிய மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அதிவேக வீதிகளில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மழையுடனான வானிலை நிலவும் போது, அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்தியதால் விபத்துக்கள் நேர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக அதிவேக வீதியில் பயணிக்கும் போது வேகக்கட்டுப்பாட்டை பேணுமாறு அதிவேக வீதியின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் செல்லும் வாகனங்களையும் பின்தொடரும் வாகனங்களையும் கண்காணித்தல் அவசியம் எனவும், இரு வாகனங்களுக்கும் இடையில் தேவையான இடைவெளி விட்டு வாகனங்களை செலுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்