இரத்தினப்புரி, எஹலியகொடவில் மண்சரிவு அபாயம்

இரத்தினப்புரி, எஹலியகொடவில் மண்சரிவு அபாயம்

எழுத்தாளர் Staff Writer

14 Oct, 2017 | 4:10 pm

கடந்த 24 மணித்தியாலங்களில் நிவித்திகல மற்றும் எஹலியகொட ஆகிய பகுதகளில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இந்த பகுதிகளில் முறையே 123 தசம் எட்டு மற்றும் 135 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மழை காரணாமாக 5 மாவட்டங்களில், அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, எஹகலியகொட, அயகம, கிரிஅல்ல, நிவித்திகல, கொலன்னாவ மற்றும் பல்மடுல்லை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மாவட்டத்தின் பிட்டபத்தர, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ,கோரளை மற்றும் காலி மாவட்டத்தின் நெலுவ பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் கினிதுவ, தவலம, உடுகம பகுதிகளில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது.

அஹங்கம, மாகும்பர வீதியின் இமதுவ, கிரீன்வத்த, பகுதிகளில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளமையால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதிக மழைக் காரணமாக களு, நில்வலா மற்றும் கிங் ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அபாய நிலையை அடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

இதேவேளை , களனி ஆற்றின் நீர் மட்டமும் வெகுவாக அதிகரித்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டள்ளார்.

ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக தாழ்நிலப்பகுதியில் வாழ்வோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக இருக்குமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளதுග

இதேவேளை சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் களுத்துறை காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றிரவு 100 தொடக்கம் 150 மில்லிமீற்றரை வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டில், நிலவும் கடும் மழையுடனான வானிலையில் நாளை முதல் தற்காலிகமாக மாற்றம் ஏற்படலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 – 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்