வர்த்தக அனுமதிப்பத்திரம் இரத்து: அர்ஜூன் அலோசியஸின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

வர்த்தக அனுமதிப்பத்திரம் இரத்து: அர்ஜூன் அலோசியஸின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

வர்த்தக அனுமதிப்பத்திரம் இரத்து: அர்ஜூன் அலோசியஸின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

13 Oct, 2017 | 8:49 pm

தமது நிறுவனத்திற்கு வழங்கியுள்ள வர்த்தக அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை எடுத்துள்ள தீர்மானத்தை இரத்து செய்யுமாறு, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதிமன்ற குழாம் முன்னிலையில் உயர் நீதிமன்றத்தில் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த மனுவிலுள்ள பிரதிவாதிகளின் பெயரில் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டி, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு, திருத்தத்தை மேற்கொள்வதற்கான அனுமதியை நீதிபதிகள் குழாம் வழங்கியது.

இலங்கை மத்திய வங்கியின் ஆரம்ப பங்குதாரராக நீண்ட காலம் செயற்பட்ட தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த வர்த்தன அனுமதிப்பத்திரத்தை, நியாயமான விசாரணை இன்றியும், விடயங்களைக் கேட்டறியாமலும் இரத்து செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை எடுத்த தீர்மானத்தினால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் உயர் நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தமது மனுவை விசாரணைக்குட்படுத்தி அது தொடர்பான உத்தரவு வழங்கும் வரை, மத்திய வங்கியின் தடையுத்தரவை நீக்குமாறு மனுதாரர் நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர், பிரதி ஆளுனர்கள் மூவர், ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் நிதிச்சபை மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்