ரயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் சாரதிகளின் பணிப்பகிஷ்கரிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Oct, 2017 | 10:15 am

ரயில் சாரதிகள் மற்றும் ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால், ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் சேவையில் ஈடுபடவில்லை என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

கண்டி, பொல்கஹவெல, மற்றும் காலியிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் மூன்று ரயில்கள் மாத்திரமே கோட்டை ரயில் நிலையத்தை வந்தடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் குறிப்பிட்டது.

இலங்கையில் நாளாந்தம் 360 ரயில்சேவைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ரயில் சாரதிகளின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பினால் சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளன.

ரயில் சாரதி உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் செயற்பாட்டில் கல்வித் தகைமையை அதிகரித்து ஊழியர்களை இணைத்துக் கொள்வதற்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

பணிப்பகிஷ்கரிப்பினால் கொழும்பு மாவட்டத்திலிருந்து வௌி மாவட்டங்களிற்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

பணிப்பகிஷ்கரிப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து ரயில் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ரயில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தின்
தலைவர் பி. எம். பி. பீரிஸ் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். விதானகேயிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடன் நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக அவர் தெரிவித்தார்.

சாரதி உதவியாளர்களின் ஆட்சேர்ப்பு திருத்தத்திற்கு அரச சேவைகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டபோக்குவரத்து அமைச்சின் செயலாளர், அதில் மேலும் திருத்தங்களை மெற்கொள்வதற்கு தமக்கு அதிகாரமில்லை எனவும் கூறினார்.

எவ்வாறாயினும் இன்றைய தினம் மீ’ண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்குத் தயாராகவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்