லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ஷலீல முனசிங்கவை உடனடியாக நீக்குமாறு உத்தரவு

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ஷலீல முனசிங்கவை உடனடியாக நீக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

11 Oct, 2017 | 7:08 pm

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து ஷலீல முனசிங்கவை உடனடியாக நீக்குமாறு அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

ஷலீல முனசிங்க, லிட்ரோ எரிவாயு நிறுவனத்தில் நிறைவேற்றுத் தலைவராக வகித்த அனைத்து அதிகாரங்களையும் இடைநிறுத்துமாறு, அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் ஹேவாவிதாரன, இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினூடாக நிர்வகிக்கப்படும் நிறுவனமாகும்.

ஷலீல முனசிங்கவை சேவையிலிருந்து நீக்குவதால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு பதில் தலைவரை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலார் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும், அமைச்சு மட்டத்தில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் கபீர் ஹசிம், அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனம் தமது அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் ஷலீல முணசிங்க அதன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்ததாக அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நியமனம் 100 நாள் அரசாங்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டவொன்று எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

100 நாள் அரசாங்க ஆட்சிக்காலத்தில் லிட்ரோ நிறுவனத்தை நிர்வகிக்கும் காப்புறுதி கூட்டுத்தாபனம், நிதி அமைச்சின் கீழிருந்ததுடன், அப்போதைய
நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க செயற்பட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்