மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தனர்

மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தனர்

எழுத்தாளர் Staff Writer

11 Oct, 2017 | 11:27 am

அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹசீம் ஆகியோர் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியமளித்தனர்.

ஆணைக்குழுவின் தலைவர் கே.ரி.ச்சித்ரசிறி தலைமையிலான நீதிபதிகள் அமைச்சர்களிடம் விசாரணை நடத்திய சாட்சியங்களை பதிவு செய்தனர்.

சர்ச்சைக்குரிய முறிகள் விநியோகம் இடம்பெறுவதற்கு முதல் நாள் முற்பகல் வேளையில் கூட்டமொன்று நடைபெற்றதாக இதன்போது அமைச்சர்கள் இருவரும் கூறியுள்ளனர்.

கடந்த ஆட்சி காலத்தில் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக செலுத்த வேண்டியிருந்த 18 பில்லியன் ரூபாவை மீள செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

செலுத்த வேண்டிய தொகையில் மூன்று பில்லியன் ரூபா பெருந்தெருக்கள் அமைச்சிடம் உள்ளதாகவும் எஞ்சியதொகை தேவைப்படுவதாகவும் கபீர் ஹசீம் கூறியுள்ளார்

இந்த கலந்துரையாடலில் ரவி கருணாநாயக்க, கபீர் ஹசீம், மலிக் சமரவிக்ரம, ஆகியோருடன் மத்திய வங்கி மற்றும் திரைசேரியின் அதிகாரிகள் கலந்துகொண்டதாக அமைச்சர்கள் இருவரும் ஆணைக்குழுவில் தெரிவித்தனர்.

மறுநாள் நடைபெறவுள்ள முறிகள் ஏலம் தொடர்பில் எந்தவொரு விடயமும் அன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படவில்லை எனவும் அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

அர்ஜுன் அலோஷியல் அல்லது அவரது நிறுவனத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நிதி வழங்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் வினவியபோது அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்