போலி அறிக்கையை பயன்படுத்தி துமிந்த சில்வாவை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து மாற்ற முயற்சி

போலி அறிக்கையை பயன்படுத்தி துமிந்த சில்வாவை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து மாற்ற முயற்சி

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 8:24 pm

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை போலியான ஆவணங்களை முன்வைத்து சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து வேறொரு வைத்தியசாலைக்கு மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

சிகிச்சைகளுக்காக துமிந்த சில்வா நாளை கண் வைத்தியசாலையின் வைத்தியரொருவரிடம் அனுப்பப்படவுள்ளதாக சிறைச்சாலை வைத்தியசாலையின் பதில் கடமைநேர வைத்திய அதிகாரி டொக்டர் ஜே.கே மல்வத்தகே குறிப்பிட்டுள்ளார்.

சிகிச்பை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு நிலைமை பாரதூரமாக இல்லை என துமிந்த சில்வா சிகிச்சை பெறும் நோயாளர் விடுதியின் வைத்தியர் கூறியிருக்கும் நிலையிலேயே இந்த சிபாரிசு முன்வைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டு 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் 8 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட துமிந்த சில்வா, அதே மாதம் 27 ஆம் திகதியிலிருந்து இதுவரை பல்வேறு காரணங்களை முன்வைத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

அவரின் உடல் நிலையில் தேறியுள்ளதாக வைத்தியர்கள் கூறியதையடுத்து, கடந்த மாதம் 28ஆம் திகதி அவர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், அன்றைய தினம் இரவு மீண்டும் அவர் தலைவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களின் பின்னர், குறித்த நோயாளர் விடுதிக்கு பொறுப்பான வைத்தியர் துமிந்த சில்வாவை மீண்டும் சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தபோது, திடீரென அங்கு வந்த பெண் வைத்தியரொருவர் துமிந்த சில்வாவின் பார்வையில் பிரச்சினையுள்ளதாகத் தெரிவித்து மற்றுமொரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பின்னர், துமிந்த சில்வா தேசிய வைத்தியசாலையின் வௌிநோயாளர் பிரிவின் விசேட வைத்தியர் ஒருவரினால் பரிசோதிக்கப்பட்டதுடன் அவருக்கு விசேடமாக எந்த மருந்தும் வழங்கப்படவில்லை.

நேற்றுக்காலை வரை சாதாரணமான வலி நிவாரண வில்லைகளை மாத்திரம் வழங்கி அவர் சிறைக்கூண்டுக்கு அனுப்புமாறு வைத்தியர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், நோயாளர் விடுதிக்கு சென்ற மற்றுமொரு பெண் வைத்தியர் துமிந்த சில்வாவின் பார்வையில் பிரச்சினையுள்ளதாகத் தெரிவித்து நாளை கொழும்பு கண் வைத்தியசாலைக்கு அனுப்புமாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆறு வருடங்களுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தினத்தில் பாரத லக் ஷ்மன் பிரேமச்சந்திர சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த கொலைச்சம்பவத்தின் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கு மேல் நீதிமன்றதின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா, சிறைச்சாலையில் தங்கிருக்காமல் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் விசேட சலுகைகளைப் பெற்றுக்கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

சில சுகாதார உபரகணங்களை, அவர் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டில் பொருத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வைத்தியசாலையின் பதில் கடமைநேர வைத்தியர் குறிப்பிட்டார்.

துமிந்த சில்வா தேகாரோக்கியத்துடன் இருப்பதாக கொழும்பு பிரதம வைத்திய அத்தியட்சகர் உள்ளிட்ட வைத்திய குழு ஒரு முறை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்