சர்வதேச நிதி தூய்தாக்கல் மோசடி தொடர்பில் ஒருவர் கைது

சர்வதேச நிதி தூய்தாக்கல் மோசடி தொடர்பில் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 7:26 pm

சர்வதேச நிதி தூய்தாக்கல் மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அது தொடர்பிலான மேலதிக தகவல்கள்…..

தாய்வானின் பாஃ ஈஸ்டர்ன் சர்வதேச வங்கியின் கணணி கட்டமைப்பிற்கு சட்டத்திற்கு புறம்பாக பிரவேசித்து, பணம் திருடிய சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பிரதமரின் உத்தரவின் படி கடந்த வாரம் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வாறு திருடப்பட்ட 60 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் இலங்கை, கம்போடியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

பாஃ ஈஸ்டர்ன் சர்வதேச வங்கியின் நிதி தொடர்பாடல் கட்டமைப்பு எனப்படும் ஸ்விப்ட் கட்டமைப்பிற்கு அனுமதியின்றி பிரவேசித்து, கிடைத்துள்ள உத்தரவிற்கு அமைய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை முதல்முறையாக அறியக்கிடைத்தது.

உலகில் உறுப்பு நாடுகளில் உள்ள வங்கிகளுக்கிடையில் இணையத்தளம் ஊடாக பாதுகாப்பான முறையில் நிதி பரிமாற்றம் செய்வதற்கு ஆலோசனை வழங்குதல் இந்தக் கட்டமைப்பின் மூலம் இடம்பெறுகிறது.

இதேவேளை தாய்வானின் பாஃ ஈஸ்டர்ன் சர்வதேச வங்கியினால் இலங்கை வங்கியில் ஜே.சி நம்முனி என்ற நபருக்கு இருந்த தனிப்பட்ட கணக்கிற்கு 1.1 மில்லியின் அமெரிக்க டொலர் வைப்புச் செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அந்த வங்கிக் கணக்கின் உரிமையாளர் கடந்த 4 ஆம் திகதி 300 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டுள்ளதாக உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மீண்டும் இலங்கை வங்கியின் தலைமை அலுவலக கிளையில் 80 இலட்சம் ரூபாவைப் பெற்றுக் கொள்ள சென்றிருந்த போது ஜே.சி நம்முனி என்பவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் புதன் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நிதி தூய்தாக்கல், கணணி குற்றம், நிதிமோசடி மற்றும் கணணி கட்டமைப்பிற்கு முறையற்ற விதத்தில் பிரவேசித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக அறிக்கை சமர்பித்துள்ளது.

இதேவேளை ஜே.சி நம்முனி என்பவருடன் பணம் பெறுவதற்கு சென்றிருந்த மற்றுமொருவரை கைது செய்வற்தற்கு வங்கியிள் சி.சி.டி.வி காட்சிகளை பயன்படுத்தி குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அரச நிறுவனம் ஒன்றின் பிரதான அதிகாரியான அவர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்குமாறும் குடிவரவு குடியகல்வு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஜே.சி நம்முனி என்ற சந்தேகநபரின் அலுவலகத்தில் இருந்து 40 இலட்சம் ரூபா கண்டுபிடிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பித்துளள்து.

அவரின் கணக்கு தற்போது நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஏற்ப இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தாய்வானின் விசேட விசாரணைக் குழுவொன்று எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இதுபோன்ற சம்பவமொன்று பதிவானது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் உள்ள வங்கியொன்றினால் பங்களாதேஷில் பேணப்பட்ட கணக்கில் இருந்து ஒரு பில்லியன் டொலரை திருடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அந்த பணத்தின் 20 மில்லியன் ஷாலிகா மன்றம் என்ற நிறுவனத்தின் பெயரில் இலங்கையின் வங்கியொன்றில் வைப்பீடு செய்யப்பட்டது.

இவ்வாறான மோசடிகளின் போது முதலில் சர்வதெச வங்கிகளுக்கு இடையில் நிதி பரிமாறப்படும் தொடர்பாடல் கட்டமைப்பான ஸ்விப்ட் கட்டமைப்பிற்கு சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட வங்கியின் ஊழியர் ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் இது இடம்பெறுகிறது.

அந்த மின்னஞ்சலை ஊழியர் திறந்து பார்க்கும் போது அதனுடன் அனுப்பப்பட்டுள்ள மென்பொருள் ஸ்விப்ட் கட்டமைப்பிற்கு உள்வாங்கப்படும்.

மோசடியில் ஈடுபடுவோர் கட்டமைப்பிற்குள் பிரவேசித்து, நிதி கொடுக்கல் வாங்கல் செய்ய இந்த மென் பொருள் மூலமே ஆலோசனை வழங்கப்படும்.

இதன்போது சில உத்தரவுகள் நிராகரிக்கப்படும் என்பதுடன், மோசடியில் ஈடுபடுவோர் வழங்கும் உத்தரவிற்கு அமைய அவர்களின் கணக்குகளுக்கு தன்னியக்க முறையில் நிதி பரிமாற்றப்படும்.

மோசடி இடம்பெறுவதாக சமிக்ஞை வெளியாகும் தகவல்கள் மிக வேகமாக அழிக்கப்படுவதும் இங்கு முக்கியமானது.

எனினும் பங்களாதேஷின் வங்கி மோசடியில் இலங்கையின் கட்டமைப்பிற்கு நிதி வைப்புச் செய்ய்பட்ட சந்தர்ப்பத்தில் டொய்ஷே வங்கி கணக்கின் பெயரில் சில எழுத்துக்களில் மாற்றங்களை அறிந்து கொண்டிருந்தனர்.

அதன் மூலம் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இந்த மோசடி அம்பலமானது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்