வவுனியா மாவட்ட செயலக விடுதிகள் அரசியல்வாதிகளின் பிடியில்

வவுனியா மாவட்ட செயலக விடுதிகள் அரசியல்வாதிகளின் பிடியில்

எழுத்தாளர் Staff Writer

08 Oct, 2017 | 7:20 pm

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான உத்தியோகத்தர் விடுதிகள் அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான மூன்று உத்தியோகத்தர் விடுதிகள் நீண்ட காலமாக அரசியல்வாதிகளின் தனிப்பட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விடுதிகள் பலவருடங்களாக உத்தியோகத்தர்களின் பாவனைக்கு வழங்கப்படாதுள்ளதால் உத்தியோகத்தர்கள் சிரமத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் செயற்பாடுகளுக்காக இந்த விடுதிகள் பயன்படுத்தப்படுவதாக வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூன்று அரசியல்கட்சியின் செயற்பாடுளுக்கு பயன்படுத்தப்படும் மூன்று விடுதிகளையும் மீண்டும் ஒப்படைக்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி நீண்ட காலமாகியும், இதுவரை விடுவிக்கப்படவில்லை என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார கூறியுள்ளார்.

மூன்று விடுதிகளையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மூன்று அரசியல் கட்சிகளினதும் முக்கியஸ்தர்களிடம் நாம் வினவினோம்.

வவுனியாவில் முன்னர் ஒரு விடுதி பயன்படுத்தப்பட்டதாகவும் அது மீளக் கையளிக்கப்பட்டதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பதில் வழங்குவதாகவும்
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பாரளுமன்ற உறுப்பினர் என்றவகையில் மக்கள் பணிக்கான அலுவலமாக மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான விடுதியை பயன்படுத்தி வருவதாக ஈழமக்கள் புரட்சிகர மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் குறிப்பிட்டார்.

மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான விடுதியினை நீண்டகாலமாக பயன்படுத்துவதாகவும், தற்போது அமைச்சு அலுவலகமாக அதனை பயன்படுத்தி வருவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, அரச விடுதிகள் அரசியல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதால் வௌிமாவட்ட அரச உத்தியோகத்தர்கள் பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்