முல்லைத்தீவில் பொலிஸாரால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவில் பொலிஸாரால் தாக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 8:10 pm

முல்லைத்தீவு – குமிழமுனையில் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குமிழமுனை வனப்பகுதியில் நேற்று (06) பகல் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

”வெறுமையாகப் போன வாகனத்தில் மணல் ஏற்றச்சொல்லி அடித்துள்ளனர். அடித்தமையால் சுயநினைவிழந்தவரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை. அயலவர்கள் தான் இவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,” என தாக்குதலுக்குள்ளானவரின் மனைவி குறிப்பிட்டார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, தாக்கப்பட்டவர் தொடர்பில் சட்ட மருத்துவ அறிக்கை கோரப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மணல் அகழ்வதாகக் கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் பொலிஸாரிடமும் தாக்கப்பட்டதாகக் கூறுபவரிடமும் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்