பிரான்ஸ் எயார்பஸ் உடனான ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் கொள்வனவு ஒப்பந்தம் இரத்தாகாதது ஏன்?

பிரான்ஸ் எயார்பஸ் உடனான ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் கொள்வனவு ஒப்பந்தம் இரத்தாகாதது ஏன்?

எழுத்தாளர் Bella Dalima

07 Oct, 2017 | 8:22 pm

A 350 – 900 ரகத்தைச் சேர்ந்த நான்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம், பிரான்ஸ் எயார்பஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கை இதுவரை இரத்து செய்யப்படவில்லை என தகவல் வௌியாகியுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்காலத்தில் குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் நியூஸ்பெஸ்ட்டிற்குக் கூறினார்.

A 350 – 900 ரகத்தைச் சேர்ந்த எட்டு விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கடந்த அரசாங்கம், 2013 ஆம் ஆண்டு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதுடன், அவற்றில் 4 விமானங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாட்டை இரத்து செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது.

அதற்காக சுமார் 90 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக செலுத்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டது.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் மற்றும் பிரான்ஸ் எயார்பஸ் நிறுவனத்திற்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, நான்கு A 350 – 900 ரக விமானங்களைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

குறித்த விமானங்களைத் தயாரிப்பதற்காக, அரசாங்கம் ஏற்கனவே கட்டணத்தின் ஒரு பகுதியை செலுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

விமானங்களின் தயாரிப்பை இரத்து செய்யுமாறு ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அறிவித்துள்ள போதிலும், அது உத்தியோகப்பூர்வ அறிவித்தலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பிரான்ஸ் எயார்பஸ் உற்பத்தி நிறுவனத்தின் அதிகாரிகள் சிலர் கலந்துரையாடுவதற்கு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் கடந்த வருடம் 14.1 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்நோக்கியதுடன், கடந்த 9 வருடங்களில் 169 பில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை மீள்கட்டமைப்பதற்கான புதிய அமைச்சரவைக் குழுவொன்றும் அரச அதிகாரிகள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்