மலையகத்தில்  மண்சரிவினால் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

மலையகத்தில்  மண்சரிவினால் இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

05 Oct, 2017 | 8:22 pm

தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறத்தட்டை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்புக்கள் இன்று அகற்றப்பட்டன.

அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையினால் தெஹியோவிட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட முறத்தட்டை தோட்டத்திலுள்ள தொடர் குடியிருப்பின் சுவர் இடிந்து வீழ்ந்தது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது.

பாதுகாப்பற்ற இந்த குடியிருப்புக்களில் மக்கள் தொடர்ந்தும் வாழ்ந்து வந்த நிலையில் இன்று அந்த குடியிருப்புக்கள் உடைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிக கொட்டில்களுக்கு அனுப்பட்டனர்.

மண்சரிவு மற்றும் பல்வேறு காரணங்களால் மலையகத்தில் தற்காலிக கொட்டில்களுக்கு அனுப்பப்படும் மக்களின் எண்ணிக்கை இவ்வாறு நாளுக்கு நாள் அதிகரிக்கின்ற….

அதேசமயத்தில் பாதுகாப்பான நிரந்த வீடுகள் எனும் கனவு மலையகத்தில் இன்னும் நிறைவேறாமை கவலைக்குரியதே….

கடந்த வருடம் மே மாதம் இடம்பெற்ற மண்சரிவினால் பாதிக்கப்பட்ட தெஹியோவிட்டை தெனிஸ்வத்த தோட்டத்தைதிலுள்ள 48 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் தோட்டத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான திட்டங்கள் கூட இன்னும் வகுக்கப்படவில்லை.

தெஹியோவிட்டை அய்லா தோட்டத்தில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட மண்சரிவின் பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வந்தனர்.

தாம் வாழ்ந்த தற்காலிக கூடாரங்களும் சேதமடைந்து சென்றுள்ளமையினால் அபாயம் மிகு தொடர் குடியிருப்புக்களுக்கு இந்த மக்கள் மீண்டும் திரும்பியுள்ளர்.

இவர்களுக்கான வீடமைப்புத் திட்டம் தொடர்பிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புலத்கோபிடிய களுபான தோட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவினால் சுமார் 80 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்தனர்.

இவர்களுக்காக 16 வீடுகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும் வீடுகளின் நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறைவு செய்யவில்லையென மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

எவ்வித வசதியும் அற்ற இந்த வீடுகளில் வாழ முடியாமையினால் தாம் மீண்டும் பழைய இடத்திற்கு திருப்பியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் நாட்டில் மேலும் பல பகுதிகளில் மண்சரிவினால் மக்கள் பாதிக்கப்பட்ட போதிலும் அவர்களுக்காக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

யடியாந்தோட்டை மீகஸ்தென்ன பகுதியில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 80 வீடுகள் கட்டப்பட்பட்டுள்ளன.

யடியாந்தோட்டை களனி தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வீடுகளை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.

அரணாநாயக்க சாமசர கந்த பகுதியில் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அநேகமான மக்கள் இன்று புது வீடுகளில் குடியமர்ந்துள்ளனர்.

எனினும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட சில தோட்டப் புறப் பகுதிகளை, எந்த அரசியல்வாதியும் திரும்பிப் பார்க்கவில்லை.

அரசாங்கத்தின் திட்டமிடலுக்கு ஏற்ப வடக்கு கிழக்கில் மக்களுக்கு வீடுகளை அமைக்கும் பொறுப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கான வீடுகளை அமைக்கும் பொறுப்பு அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கிராமிய நடுத்தர வருமானம் பெறும் குடும்பகளுக்கான மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

தோட்டப்புற மக்களுக்கு வீடுகளை அமைக்கும் பொறுப்பு அமைச்சர் பழனி திகாம்பரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட துறை லைன் அறைகளில் வாழ்வோருக்கு 25,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் எனவும் காணி மற்றும் ஏனைய வசதிகள் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் எனவும் 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டமையை மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை….

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்