பயன்பாடற்றுக் காணப்படும் நெடுங்கேணி பஸ் நிலையம்

பயன்பாடற்றுக் காணப்படும் நெடுங்கேணி பஸ் நிலையம்

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 8:47 pm

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் 7 வருடங்களுக்கு முன்னர் பஸ் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக சுமார் 25 மில்லியன் ரூபா செலவில் இந்த பஸ் நிலையம் நிர்மாணிக்கப்பட்டது.

எனினும், குறித்த பஸ் நிலையத்தில் பஸ்கள் தரித்து நிற்பதில்லை என மக்கள் குறிப்பிட்டனர்.

பஸ் நிலைய கட்டடத்தொகுதியில் சுமார் 20 கடைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

கடையொன்றுக்கு மாதாந்தம் 1750 ரூபாவை பிரதேச சபைக்கு வாடகையாக செலுத்த வேண்டியுள்ள போதிலும், பஸ்கள் வருகை தராதமையினால் தமது வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.

இதனால் அவர்கள் தமது கடைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில் நெடுங்கேணி நகர மத்தியில் உள்ள தரிப்பிடத்தில் பஸ்கள் நின்று செல்வதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, 195 மில்லியன் ரூபா செலவில் திறந்து வைக்கப்பட்ட வவுனியா புதிய பஸ் நிலையமும் இன்று வரை பயன்பாடின்றிக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வவுனியா புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இரண்டு சேவைகளும் ஒரே பஸ் நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேர அட்டவணை முறையாக இன்மையினால், இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

இந்த பிரச்சினை தொடர்பில் பல தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இன்று வரை தீர்வு எட்டப்படவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்