தொலைவிலுள்ள ஹம்பாந்தோட்டைக்கு கை கொடுக்கும் உமா ஓயா அருகிலுள்ள மக்களுக்கு கானல் நீரானது ஏன்?

தொலைவிலுள்ள ஹம்பாந்தோட்டைக்கு கை கொடுக்கும் உமா ஓயா அருகிலுள்ள மக்களுக்கு கானல் நீரானது ஏன்?

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 7:14 pm

உமா ஓயா திட்டம் மூலம் ஹம்பாந்தோட்டை உள்ளிட்ட தூரப் பிரதேசங்களுக்கு நீரைக் கொண்டு செல்வதற்கான பாரிய திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும், உமா ஓயாவை அண்மித்த பகுதியில் வாழும் மக்கள் நீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஊவ பரணகம பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட கஹட்டபிட்டிய தோட்டம், உமா ஓயாவில் இருந்து சுமார் இரண்டரை கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் இருந்து பார்க்கும் போதே உமா ஓயா தென்படுகின்ற போதிலும், அதன் நீர் இவர்களுக்கு கானலாகவே உள்ளது.

கஹட்டபிட்டிய தோட்ட மக்கள் குடிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் தினமும் பணம் செலுத்தியே நீரைப் பெற்றுக்கொள்கின்றனர்.

இங்கு சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். என்றாலும், ஒரேயொரு கிணறு மாத்திரமே உள்ளது.

உமா ஓயா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அந்தக் கிணற்றிலும் நீர் வற்றிவிட்டதாக மக்கள் குறிப்பிட்டனர்.

20 வருடங்களாக இவர்கள் குடிநீர்ப் பிரச்சினையை எதிர்கொள்கின்ற போதிலும், எவரும் இதுவரை அவதானம் செலுத்தாமை கவலைக்குரியதே.

நீரைப் பெற்றுக்கொள்வதற்காக பல மணித்தியாலங்கள் இங்குள்ள மக்கள் காத்திருப்பதுடன், இரவு நேரங்களிலும் அந்நிலமை தொடர்கின்றது.

அபிவிருத்தி என்ற பெயரில் மிகத் தொலைவில் உள்ள மக்களுக்கு நீரை விநியோகிக்க உமா ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போது, மிக அருகில் உள்ள மக்களை கவனத்திற்கொள்ளாமை வேதனைக்குரியது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில், அவரது சொந்த ஊரான ஹம்பாந்தோட்டைக்கு நீரை விநியோகிக்க உமா ஓயா திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்காக அமைக்கப்படும் சுரங்கம் காரணமாக பல வீடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த வீடுகளை விட்டு வௌியேற வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

பதுள்ளை மாவட்டத்தில் 5000 குடும்பங்களை அவ்வாறு வௌியேற்ற வேண்டி ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்