ஸ்பெயினிடமிருந்து தனி நாடு கோரும் கேட்டலோனியா: 90 வீதமானோர் ஆதரவு

ஸ்பெயினிடமிருந்து தனி நாடு கோரும் கேட்டலோனியா: 90 வீதமானோர் ஆதரவு

ஸ்பெயினிடமிருந்து தனி நாடு கோரும் கேட்டலோனியா: 90 வீதமானோர் ஆதரவு

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 3:28 pm

ஸ்பெயினிடமிருந்து தனி நாடு கோரி கேட்டலோனியா மாகாண மக்கள் நடத்திய பொதுவாக்கெடுப்பில் 90 வீதமானோர், தனி நாட்டிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

ஸ்பெயினின் வட கிழக்கில் கேட்டலோனியா மாகாணம் அமைந்துள்ளது.

அதன் மக்கட்தொகை 75 இலட்சம். அந்நாட்டின் பொருளாதாரத்தில் 20 சதவீதம் கேட்டலோனியா பங்களிப்புச் செய்கிறது.

கடந்த 2008 பொருளாதார தேக்கநிலையின்போது கேட்டலோனியா கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.

ஆனால், ஸ்பெயின் அரசு கேட்டலோனியாவின் வளர்ச்சியில் அக்கறைகாட்டவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

கேட்டலோனியா மாகாண மக்கள் கேட்டலான் என்ற மொழியைப் பேசுகின்றனர். அம்மொழியைப் புறக்கணித்து ஸ்பானிஷ் மொழியை மட்டுமே பேச வேண்டும் என மத்திய அரசு நிர்பந்தம் செய்து வருகிறது.

இதன் காரணமாக கிளர்ச்சி ஏற்பட்டு நேற்று முன்தினம் (01) பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாக 20 இலட்சத்து 26 ஆயிரம் பேர் வாக்களித்தனர். இதில் 90 சதவீதம் பேர் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

வாக்கெடுப்பு நடைபெற்றபோது ஸ்பெயின் பொலிஸார் அதனைத் தடுக்க முற்பட்டனர். அதன்போது ஏற்பட்ட மோதலில் 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திடீர் திருப்பமாக கேட்டலோனியோ தீயணைப்புப் படை வீரர்கள் பொதுமக்களுக்கு ஆதரவாகக் களமிறங்கி அவர்களுக்கு பாதுகாப்பு அரண் அமைத்தனர்.
இதனால் வாக்கெடுப்பு அமைதியாக நடைபெற்றது.

எவ்வாறாயினும், இந்த வாக்கெடுப்பினை சட்டவிரோதமானது என ஸ்பெயினின் பிரதமர் மரியானோ குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய குழப்பத்தால் அங்கு பதற்றநிலை நிலவுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்