வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியா படுகொலை வழக்கில் விடுதலையான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 10:01 pm

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு, பிறிதொரு வழக்கின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள B அறிக்கையில் கடத்தல், கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை ஆகிய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் பிரகாரம், கோபி கிருஷ்ணன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் நிரபராதி என Trial at Bar மன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறித்தும் நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் இன்று மன்றுக்கு அறிவித்துள்ளார்.

எனவே, இந்த வழக்கில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தில் கோபி கிருஷ்ணன் என்ற பொலிஸ் உத்தியோகத்தர் சாட்சியாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளாரா என்பதை ஆராய வேண்டிய கடப்பாடு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றுக்கு உள்ளது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

அதனை அறிந்துகொண்டதன் பின்னரே, பாதுகாப்பு சட்டத்தின் கீழா அல்லது இலங்கை தண்டனை சட்டக்கோவையின் கீழா இந்த வழக்கை நடத்த முடியும் என்பதை தீர்மானிக்க இயலும் எனவும் நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் அறிவித்துள்ளார்.

எனவே, யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றவியல் குற்றப்பத்திரிகையின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதியை மேல் நீதிமன்ற பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளுமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற பதிவாளருக்கு நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சந்தேகநபரை தொடர்ந்து எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்