பிரதமர் மோடி என்னை விட மிகப்பெரிய நடிகர் – பிரகாஷ்ராஜ்

பிரதமர் மோடி என்னை விட மிகப்பெரிய நடிகர் – பிரகாஷ்ராஜ்

பிரதமர் மோடி என்னை விட மிகப்பெரிய நடிகர் – பிரகாஷ்ராஜ்

எழுத்தாளர் Staff Writer

03 Oct, 2017 | 8:50 am

பத்திரிகையாளர் கொலையை கொண்டாடுவதை வேடிக்கை பார்க்கும் பிரதமர் மோடி என்னைவிட மிகப்பெரிய நடிகர் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

கடந்த மாதம் 5 ஆம் திகதி பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவர் தனது பத்திரிகையில் வலதுசாரி கருத்துக்களை விமர்சித்து எழுதியுள்ளார், இதனால் அவர் மீது ஆர்.எஸ்.எஸ். சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது, அவரது படுகொலைக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலைக்கு அவரது குடும்ப நண்பரும் நடிகருமான பிரகாஷ்ராஜ் ஏற்கனவே கண்டனம் தெரிவித்திருந்தார்.

கௌரி லங்கேஷ் மரணத்தால் சத்தம் அதிகமாகி இருக்கிறது, துப்பாக்கி குண்டுகள் மிரட்டலால் இந்த சத்தத்தை நிறுத்த முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் கௌரி கொலை செய்யப்பட்டதை கொண்டாடுவது தொடர்பாக பிரகாஷ்ராஜ் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளார், பெங்களூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரகாஷ்ராஜ் இது குறித்து கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதை சமூக வலைதளங்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் யார் எங்கு இருக்கிறார்கள்? அவர்களது சித்தாந்தம் என்ன? என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கொலையை கொண்டாடுவது மிகவும் கொடூரமானது. அவர்கள் பிரதமர் மோடியை தவிர வேறு யாரையும் பின்பற்றாதவர்கள் என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் மோடி தனது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து மௌனமாக இருந்து வருகிறார். இதன் மூலம் அவர் தன்னை விட மிகப்பெரிய நடிகராக முயற்சித்து வருகிறார் என்பதை நிரூபித்து உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது தனக்கு கவலையளிப்பதாகவும் தனது ஆதரவாளர்களில் சிலர் கொடூரமாக நடப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் முயற்சி செய்கிறார் எனவும் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்