இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையும்: சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையும்: சர்வதேச நாணய நிதியம்

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 8:12 pm

இவ்வருடத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.5 வீதத்திற்கும் குறைவாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அரச வருமானத்தை அதிகரித்து, கடனைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அண்மையில் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அறிவித்திருந்தது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம் இலங்கை 9702.5 ட்றில்லியன் ரூபா கடன் பெற்றுள்ளது.

அதில் 4076.6 ட்றில்லியன் ரூபா வெளிநாட்டுக்கடன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வருமான வரி சட்டத்தின் மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கச் செய்வது சிறந்த விடயம் என கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்தார்.

வருமானத்தை அதிகரிப்பதைப் போன்று நாட்டின் வீண் செலவுகளையும் குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஏற்றுமதியையும் வௌிநாட்டு முதலீடுகளையும் அதிகரிப்பதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரைகளை நோக்கும் போது அரசாங்கம் எவ்வித பொருளாதார இலக்குமின்றி செயற்படுகின்றமை புலப்படுவதாக பேராசிரியர் சுமனசிறி லியனகே குறிப்பிட்டார்.

கடந்த இரண்டரை வருடங்களில் வெளிநாட்டு முதலீடு 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பிரதமர் கூறிய போதிலும், அறிக்கைகளின் அடிப்படையில் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2016 ஆம் ஆண்டில் வௌிநாட்டு முதலீடு குறைவடைந்துள்ளதாக பேராசிரியர் சுமனசிறி லியனகே சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் பொருளாதாரம் தொடர்பில் போலியான தகவல்களையே கூறி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்