இரவு 11.30 மணி வரை நடந்த கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய வைர விழா

இரவு 11.30 மணி வரை நடந்த கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய வைர விழா

எழுத்தாளர் Bella Dalima

03 Oct, 2017 | 9:05 pm

மாகாணக் கல்வி அமைச்சின் கோரிக்கையை மீறி கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் நேற்று (02) வைர விழா நடத்தப்பட்டமை தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழாவினை பிற்போடுமாறு கோரி பாடசாலை சமூகத்தினால், வட மாகாண கல்வி அமைச்சருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அதனை பிற்போடுமாறு அறிவித்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் நேற்று தெரிவித்தார்.

வைர விழாவிற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் அழைக்கப்பட்டமை தொடர்பில் தமக்க உடன்பாடு இல்லை எனவும் இதன் காரணமாக இந்த நிகழ்வினைப் பிற்போடுமாறும் பாடசாலையின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் சிலர் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் காரணமாக வைர விழாவினை பிறிதொரு தினத்தில் நடத்துமாறு பாடசாலை அதிபருக்கு கடிதமூலம் அறிவித்ததாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

எனினும், ஏற்பாடு செய்யப்பட்டதைப் போன்று கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் வைர விழா நேற்று நடைபெற்றது.

மாலை 5.00 மணிக்கு ஆரம்பமான வைர விழா இரவு 11.30 மணி வரை நடைபெற்றது.

வைர விழா நிகழ்வுகள் இரவு வரை நீடித்ததால் மாணவர்கள் பலர் நிகழ்வுகளின் இடையில் உறங்கியமையை அவதானிக்க முடிந்தது.

கல்வி அமைச்சு உத்தரவொன்றைப் பிறப்பிக்கும் போது அதனை ஒரு பாடசாலை மீறுமாக இருந்தால், எதிர்காலத்தில் ஏனைய பாடசாலைகளும் அவ்வாறு நடந்துகொள்ள முயற்சிக்கும். ஆகையால், இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்