இன்று சர்வதேச சிறுவர் தினம்

இன்று சர்வதேச சிறுவர் தினம்

எழுத்தாளர் Staff Writer

01 Oct, 2017 | 7:27 pm

போலியற்ற அழகிய சிறுவர் சந்ததியினரே உலகை பிரகாசிக்கச் செய்யும் அடையாளங்களாகும்.

அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பெரியவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கையில் இன்று சிறுவர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்ற நிகழ்வுகளூடாக தெரியவந்துள்ளது.

சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டமை, சேயா சதெவ்மியின் கொலை என்பன, வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் சிறார்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர் என்பதை எடுத்துகாட்டுகின்றது.

அதேபோல உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் இன்றைய இன்றைய நாளில் இலங்கையில் 13704 சிறுவர் தொழிலாளர்களாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தகவலுக்கு அமைய அவர்களில் 87854 பேர் குடும்ப நிலை கருதி சிறுவர் தொழிலாளர்களாக வாழ்கின்றனர்.

பெருந்தோட்ட பகுதிகளில் 2321 பேர் சிறுவர் தொழிலாளர்களாக வாழ்கின்றனர்.

34,494 பெண் பிள்ளைகளும், 65210 ஆண் பிள்ளைகளும் சிறுவர் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 1980 மற்றும் 90 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் இலங்கையில் 11 இலட்சம் சிறார்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, நெதர்லாந்தின் ஆய்வுக் குழுவொன்றை மேற்கோள் காட்டி பீ.பீ.சி அண்மையில் செய்தி வௌியிட்டிருந்தது.

சிறார்களை போன்றே முதியவர்கள் தொடர்பில் இன்று அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இரு சாராருக்குமான தினம் இன்று கொண்டாடப்படுவதால் இவர்கள் தொடர்பில் அதிக கரிசனை ஏற்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் 30 இலட்சம் முதியவர்கள் வாழ்வதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நூறு வயதை தாண்டிய 257 பேர் நாட்டில் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்