ஊவா மாகாணத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை

ஊவா மாகாணத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 8:29 pm

ஊவா மாகாணத்தில் க.பொ.த உயர்தர விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளை தொடர்வதில் நிலவும் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதிலும், இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

ஊவா மாகாணத்தில் க.பொ.த உயர்தர விஞ்ஞான, கணிதப் பிரிவுகளுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.

வேறு மாகாணங்களுக்கும் சென்று உயர்தர கணித, விஞ்ஞான பிரிவை தொடர முடியாமல், ஊவா மாகாண மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன.

இந்த ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இந்திய ஆசிரியர்களை வரவழைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர்
வே.இராதாகிருஷ்ணன் இந்த வருடம் மே மாதம் நான்காம் திகதி தெரிவித்திருந்தார்.

இந்த செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சரிடம் நேற்று நாம் வினவினோம்.

அந்த முயற்சிகள் தாமதமாகியுள்ளன, இந்தியாவில் அகதி முகாமில் உள்ள பட்டதாரிகள் தொடர்பில் விபரங்கள் திரட்டப்படுகின்றன. அவர்களை அழைத்து நியமிப்பதில் எவ்வித பிரச்சினையும் இருக்காது. இதற்கு இன்னும் 3 மாதங்கள் ஆகலாம்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் வாக்குறுதியளித்த ஏழு நாட்கள் கடந்து பல நாட்களாகியும் இதுவரை அந்த நடவடிக்கையூடாகவும் தீர்வு கிட்டவில்லை.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் இன்று நாம் வினவினோம்.

பலரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதை விடுத்து, மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து விரைந்து செயற்படுமாறு மக்கள் கோருகின்றனர்.

ஊவா மாகாண உயர்தரப்பிரிவு மாணவர்களின் எதிர்காலம் தொடர்பில் இனியேனும் சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்