அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதி சுகயீனம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் அரசியல் கைதி சுகயீனம்

எழுத்தாளர் Staff Writer

30 Sep, 2017 | 7:37 pm

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் மூவரில் ஒருவர் சுகயீனமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

எனினும் ஏனைய இரண்டு கைதிகளும் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தம்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டாம் என கோரி கடந்த 25 ஆம் திகதி முதல் அரசியல் கைதிகள் மூவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பிய போதிலும் எவ்வித பதிலும் இதுவரை தெரிவிக்காததால், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.

அரசியல் கைதிகள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தை முன்னெடுக்கும் நிலையில், உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோருக்கு ஏதும் அசம்பாவிதம் ஏற்படுமாயின் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அரசும் பொறுப்பேற்க வேண்டும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு எதிர்கட்சி தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்