இழுபறியில் தோட்டத் தொழிலாளர்களின் நிலுவைச்சம்பளம்!

இழுபறியில் தோட்டத் தொழிலாளர்களின் நிலுவைச்சம்பளம்!

எழுத்தாளர் Bella Dalima

28 Sep, 2017 | 8:49 pm

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

ஒன்றரை வருடம் கடந்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும், தமக்கான நிலுவைச்சம்பளம் கிடைக்கவில்லையென தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பிலான கூட்டு ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி காலாவதியான பின்னர், மீண்டும் கைச்சாத்திடப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், ஒன்றரை வருடம் அது இழுபறியில் இருந்த நிலையில், மக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளம் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் நாள் சம்பளம் 1000 ரூபா வரை அதிகரிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், 730 ரூபா சம்பள உயர்விற்கான உடன்படிக்கையில் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் கைச்சாத்திட்டன.

இதற்கமைய, அடிப்படை சம்பளமாக 500 ரூபாவும் விலைக்கு அமைவான கொடுப்பனவாக 30 ரூபாவும் உற்பத்தி ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவும் வருகைக்கான கொடுப்பனவாக 60 ரூபாவும் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டும்.

அதன்படி, 450 ரூபாவாகக் காணப்பட்ட தோட்டத் தொழிலாளரின் அடிப்படைச் சம்பளம் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.

கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக 620 ரூபாவாகக் காணப்பட்ட சம்பளம் 730 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் நடைபெறுவது வழமையாகும்.

உடன்படிக்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ். ராமநாதன் மற்றும் முதலாளிமார் சம்மேளனப் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, W.D.J.செனவிரத்ன, நவீன் திசாநாயக்க, மஹிந்த அமரவீர ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் நிலுவைச்சம்பளத்தைப் பெற்றுத்தருவதாக தொழிற்சங்கங்கள் உறுதி வழங்கியிருந்தன.

எனினும், அரசியல்வாதிகள் உறுதி வழங்கியதைப் போன்று நிலுவைச்சம்பளம் இன்னும் தமக்கு கிடைக்கவில்லையென தோட்டத் தொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்னும் நிலுவை வழங்கப்படாமை தொடர்பிலும், அடுத்த கூட்டு ஒப்பந்தம் எப்போது கைச்சாத்திடப்படும் என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

நிலுவைச்சம்பளத்தை வழங்குவதாக தாம் ஒருபோதும் உறுதி வழங்கவில்லையென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

அடுத்த கூட்டு ஒப்பந்தம் தொடர்பிலான பேச்சுவார்த்தை 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமே ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்