மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது: தோமஸ் ஷெனன்

மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளது: தோமஸ் ஷெனன்

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 3:19 pm

யுத்தத்தின் பின்னர் அரசியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் முன்னெடுக்கப்படும் மீளக்கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் இலங்கை முன்னேற்றமடைந்துள்ளதாக அமெரிக்க அரசியல்துறை தொடர்பான பதில் இராஜாங்க செயலாளர் தோமஸ் ஷெனன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு நியூயோர்க் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் நிர்வாகம் தொடர்பில் சர்வதேச நாடுகளில் சிறந்த வரவேற்பு காணப்படுவதாகவும் தோமஸ் ஷெனன் கூறியுள்ளார்.

இந்து சமுத்திர வலய நாடுகளுக்குள் இலங்கை முன்னெடுக்கும் நட்புறவு செயற்பாடுகள் குறித்து அவர் தனது மகிழ்சியை வௌிப்படுத்தியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகளின் ஆதரவு தொடர்ந்தும் தேவைப்படுவதாக இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேபாளப் பிரதமர் ஷேர் பஹூதூரை சந்தித்து நேற்று (21) மாலை கலந்துரையாடியுள்ளார்.

சார்க் வலயத்தின் செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கும் ஒத்துழைப்பு தொடர்பில் நேபாளப் பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைனை ஜனாதிபதி இன்று சந்திக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை தூதரகத்தில் இன்று நள்ளிரவு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்