அர்ஜூன் மகேந்திரனிடம் ஜனாதிபதி ஆணைக்குழு குறுக்கு விசாரணை

அர்ஜூன் மகேந்திரனிடம் ஜனாதிபதி ஆணைக்குழு குறுக்கு விசாரணை

அர்ஜூன் மகேந்திரனிடம் ஜனாதிபதி ஆணைக்குழு குறுக்கு விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 8:58 pm

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனிடம் முறிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று குறுக்கு விசாரணை நடத்தியது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மத்திய வங்கியின் ஆளுநர் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனக்கு மறைமுகமாகத் தெரியப்படுத்தியதாக அர்ஜூன் மகேந்திரன் இன்று ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார்.

எவ்வாறாயினும், பிரதமர் தொலைபேசியூடாக அழைப்பு விடுத்து, அந்த பதவியைப் பொறுப்பேற்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததாக பதில் சொலிஸிட்டர் ஜெனரல் தப்புல டி லிவேரா தெரித்தார்.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி காலை மத்திய வங்கியில் இடம்பெற்ற சந்திப்பில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர் கபீர் ஹாசிம், பிரதமரின் அப்போதயை ஆலோசகர் மலிக் சமரவிக்ரம, பிரதி ஆளுநர்கள், திறைசேரியின் செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டதாக அர்ஜூன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 75 பில்லியன் ரூபா அவசரத் தேவையாகவுள்ளதாக குறித்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அர்ஜூன் மகேந்திரன் கூறியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் பின்னர், உடனடியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடி, வீதி அபிவிருத்திக்கு செலவாகும் சரியான தொகையைக் கணிப்பிடுமாறு பிரதமர் தனக்கு ஆலோசனை வழங்கியதாக அர்ஜூன் மகேந்திரன் சாட்சியமளித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் இதற்கு முன்னர் தனது சட்டத்தரணியின் ஊடாக ஆணைக்குழுவில் சமர்ப்பித்த, திகதி குறிப்பிடப்படாத முன்னாள் நிதி அமைச்சரின் கையொப்பத்துடனான கடிதம் தொடர்பில் இங்கு கேள்வி எழுப்பப்பட்டது.

அந்தக் கடிதம் அப்போதைய நிதியமைச்சரிடம் இருந்து கிடைத்ததாக தாம் நம்புவதாகவும், எனினும் அது அவரிடமிருந்துதான் கிடைத்தது
என்பதனை ஊர்ஜிதமாகத் தெரிவிப்பது கடினமாக இருப்பதாகவும் அவர் பதிலளித்துள்ளார்.

இதேவேளை, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு அழைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சில விடயங்கள் தொடர்பில் தாம் அறியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி கசுன் பாலிசேனவிடம், சில நபர்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட இரகசிய பெயர்கள் தொடர்பில் வினவப்பட்டபோது, அந்தப் பெயர்கள் எந்த ஒரு நபருக்கும் உரித்துடையதாக இருக்கலாம் என அவர் தெரிவித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்