28 பில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டமடையும் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் அதிக சம்பளம் பெறும் 4 அதிகாரிகள்

28 பில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டமடையும் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் அதிக சம்பளம் பெறும் 4 அதிகாரிகள்

28 பில்லியன் ரூபாவிற்கு மேல் நட்டமடையும் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் அதிக சம்பளம் பெறும் 4 அதிகாரிகள்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2017 | 7:59 pm

2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத இறுதியில் எமது நாட்டிற்கு 9,402 பில்லியன் ரூபா கடன் சுமை இருந்தது.

நாளுக்கு நாள் இந்த கடன் சுமை அதிகரித்து வருவதுடன் நாட்டு மக்களான, நாமே இதனை மீளச் செலுத்த நேரிடுகிறது.

அதிக சம்பளம் பெறுகின்ற ஒரு சிலரின் அசமந்த நிர்வாகத்தினால் தொடர்ச்சியாக நட்டமடையும் நிறுவனமான ஸ்ரீ லங்கன் விமான சேவையும் கடன் சுமை அதிகரிக்க காரணமாக அமைகின்றது.

நாடு மற்றும் நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அநேகமான ஊழியர்கள் இது குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் வருடாந்த கணக்கறிக்கைகளுக்கு அமைய 2016, 2017 நிதி ஆண்டின் நட்டம் 28 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.

இந்தளவு பாரிய நட்டத்தை எதிர்நோக்கும் நிறுவனம் அன்றாட செலவை, அரச வைங்கிகளில் பெற்றுக் கொண்ட 7.5 பில்லியன் ரூபா மிகை எடுப்பை பயன்படுத்தியே ஈடு செய்கின்றது.

விமான கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புடைய முறைகேடுகள் மற்றும் முகாமைத்துவ சீர்கேடுகள் காரணமாக நாட்டின் சர்வதேச இலட்சினையை உலகிற்கு எடுத்துச் செல்லும் தேசிய விமான சேவை நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பில்லியன் கணக்கில் நட்டமடையும் நிலைக்கு ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் தள்ளப்பட்டாலும் மூன்று மில்லியன் ரூபாவிற்கும் மேல் மாதாந்த கொடுப்பனவு பெறுகின்ற நால்வர் இன்றும் அந்த நிறுவனத்தின் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.

உரிய வணிக மூலோபாயங்களை நடைமுறைப்படுத்தி நிறுவனத்தை இலாபமடையும் நிலைக்கு மேம்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அவர்களில் ஒருவரான பிரதம வணிக அதிகாரிக்கு உள்ளது.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 2016ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி பிரித்தானியாவில் இருந்த சிவராமச்சந்திரன் என்பவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இரண்டு வருடங்களுக்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதுடன், ஒப்பந்தத்தின் பிரகாரம் அவருக்கு மாதாந்தம் 9500 பவுன்கள் அடிப்படை சம்பளமாக வழங்கப்படுகின்றன.

தற்போதைய நாணய மாற்று விகிதத்தின் பிரகாரம் அதன் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாவாகும்.

இந்த அடிப்படைச் சம்பளத்திற்கு மேலதிகமாக சிவராமச்சந்திரன் என்பவர் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியையும் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனமே செலுத்துகின்றது.

இதனைத் தவிர எரிபொருளுடன் உத்தியோகபூர்வ வாகனம் மற்றும் சாரதி, இருப்பிடத்திற்காக 250,000 ரூபா கொடுப்பனவு மற்றும் இலவச விமான பயணங்களுக்கான செலவுகளையும் நிறுவனமே சுமக்கின்றது.

சிவராமச்சந்திரன் கடமைகளைப் பொறுப்பேற்ற 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதியில் இருந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையான 19 மாதங்களுக்காக ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திடமிருந்து நான்கு கோடியே 18 இலட்சத்து 92 ஆயிரத்து 166 ரூபாவை பெற்றுள்ளார்.

இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்த என்பவராவார்.

அவர் பிரதமரின் ஆலோசகர் ச்சரித்த ரத்வத்தேயின் சகோதரராவார்.

சுரேன் ரத்வத்தவும் மூன்று மில்லியனுக்கு மேல் சம்பளம் பெறுகின்ற உயர் அதிகாரிகள் வரிசையில் இடம்பெற்றாலும் அவரது சம்பள விபரத்தைக் கோரி சட்டரீதியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு கூட நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் விமானிகள் சங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இது தொடர்பில் விடுத்த அனைத்து கோரிக்கைகளையும் நிறுவனம் நிராகரித்துள்ளது.

மூன்று மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட சம்பவளம் பெறுகின்ற நான்கு அதிகாரிகள் இருந்தும் இந்திய நிறுவனத்திடமிருந்து குத்தகைக்கு பெறப்பட்ட ஏ 320 விமானத்தை உரிய காலத்தில் மீள ஒப்படைக்க முடியாமற்போனதால் மாத்திரம் நிறுவனத்திற்கு சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக செலவு ஏற்பட்டுள்ளது.

விமானங்களை பழுதுபார்ப்பதற்கான ஐரோப்பிய விமான பாதுகாப்பு முகவர் நிறுவனத்தின் அங்கீகாரத்தையும் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் அண்மையில் இழக்க நேரிட்டது.

28 பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நட்டத்துடன் நடத்திச் செல்லப்படுகின்ற நாட்டின் தேசிய விமான சேவைக்கு மூன்று மில்லியன் ரூபாவுக்கு மேல் மாதாந்த சம்பளம் பெறுகின்ற நான்கு உயர் அதிகாரிகளின் சேவை பெறப்பட்டதால் கிடைத்த நன்மை என்ன?

இறுதியில் இந்த சுமையும் நாட்டு மக்கள் மீதல்லவா சுமத்தப்படுகிறது?

சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கல்லவா பாதிப்பு ஏற்படுகிறது?

 

நட்டத்திற்கு மேல் நட்டமடையும் விமான கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள்…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்