பதுளை மாவட்டத்தில் 70 வீதமான பகுதிகளில் மண்சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தில் 70 வீதமான பகுதிகளில் மண்சரிவு அபாயம்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2017 | 3:27 pm

நாடளாவிய ரீதியில் மண்சரிவு அபாயமுள்ள 15,000 இடங்கள் தொடர்பான கள ஆய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

கள ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான தள வரைப்படம் தற்போது தயார் செய்யப்படுவதாக நிறுவகத்தின் மண்சரிவு எச்சரிக்கை முகாமைத்துவ பிரிவின் பதில் பணிப்பாளர் கலாநிதி காமினி ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மழையுடனான வானிலை காரணமாக மண்சரிவு அபாய வலையங்கள் மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும் மண்சரிவு அபாயம் காணப்படக் கூடிய பகுதிகளில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களை குறைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காமினி ஜயசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களத்தின் வானிலை அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதுளை மாவட்டத்தில் 70 வீதமான பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி தெரிவித்துள்ளார்.

மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் 6,180 குடும்பங்கள் வாழ்வதாகவும் மாவட்ட செயலாளர் கூறியுள்ளார்.

தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தால் பதுளை மாவட்டம் அதிக அபாயமுள்ள வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான அபாய வலையங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் பதுளை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் 310 கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு அபாய வலயங்களில் வாழும் மக்களின் அனைத்து தரவுகளும் தற்போது மாவட்ட செயலகத்தினூடாக கோப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

பாரிய அவதான வலயங்களிலுள்ள வீடுகளில் வசிப்போருக்கு 12 ,50,000 ரூபா நட்ட ஈட்டை பெற்று கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைபுலத்கோஹோபிட்டிய யக்கல நந்தனகம பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

நந்தனகம கிராமத்திலுள்ள மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

சுமார் 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என நந்தனகம கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இரத்தின்புரி, களுத்துறை, கேகாலை , நுவரெலியா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்