உன்னிச்சையில் மூச்சுத்திணறல், கண் வீக்கத்துடன் திடீரென உயிரிழக்கும் மாடுகள்

உன்னிச்சையில் மூச்சுத்திணறல், கண் வீக்கத்துடன் திடீரென உயிரிழக்கும் மாடுகள்

எழுத்தாளர் Bella Dalima

08 Sep, 2017 | 7:35 pm

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பகுதியில் கடந்த சில தினங்களாக கால்நடைகள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகியுள்ளன.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு கண் பகுதியில் வீக்கத்துடன் மாடுகள் உயிரிழப்பதாகவும் திடீர் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவில்லை எனவும் கால்நடைப் பண்ணையாளர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடந்த 10 நாட்களில் 25 மாடுகள் உயிரிழந்துள்ளன.

ஒரே பண்ணையில் 5 மாடுகள் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாக மாடுகள் இறப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பினருக்கு தாம் முறையிட்ட போதிலும் அசமந்த போக்கே கடைப்பிடிக்கப்படுவதாக மக்கள் விசனம் வௌியிட்டனர்.

மாடுகளின் திடீர் உயிரிழப்பு தொடர்பில் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் துரைராஜசிங்கத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த விடயம் தொடர்பில் தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனவும் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, உன்னிச்சைக்குளத்தில் மாடுகள் உயிரிழப்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உன்னிச்சைக்குளமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நீர்வளங்கல் ஆதாரமாகக் காணப்படுகின்றது.

இந்தக் குளம் குடிநீருக்காகவும் மீன்பிடிக்காகவும் பாவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 95 வீதமான குடிநீர்த் தேவை உன்னிச்சைக்குளத்தின் மூலமே பூர்த்தி செய்யப்படுகின்றது.

குளத்தின் நீர் சுத்திகரிக்கப்பட்டு மக்களின் குடிநீர்த் தேவையைப்பூர்த்தி செய்யும் நிலையில், மாடுகளின் உயிரிழப்பானது குடிநீரிலும் தாக்கத்தை செலுத்துமா என மட்டக்களப்பு பிராந்திய நீர்வழங்கல் சபையிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

இந்த சம்பவம் நீர்ச்சுத்திகரிப்பு பரிசோதனையில் இதுவரை தாக்கத்தை செலுத்தவில்லை எனவும் இந்த விடயம் தொடர்பில் பிரதேச சபையிடம் தெரிவித்துள்ளதாகவும் தேசிய நீர்வழங்கல் சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் டி.ஏ.பிரகாஷ் தெரிவித்தார்.

1919 ஆம் ஆண்டில் மகிழவட்டுவான் ஆற்றை மறித்துக் கட்டப்பட்ட இக்குளமானது மட்டக்களப்பில் உள்ள மிகப்பெரிய குளமாக விளங்குகின்றது.

61,000 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தில் சிறுபோக மற்றும் பெரும்போக விளைச்சலுக்கு தேவைப்படுகின்ற நீர் பெற்றுக்கொள்ளப்படுகிறது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்