வௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது

வௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் மணல் கொண்டு செல்லப்படுகிறது

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 7:25 pm

மட்டக்களப்பு – வாகனேரி, முள்ளிவெட்டுவான் ஆற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாகக் கூறப்படும் பகுதிக்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இன்று சென்றிருந்தார்.

முள்ளிவெட்டுவான் ஆற்றுப்பகுதிக்கு இன்று சென்ற சந்தர்ப்பத்தில் சிலர் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்ததுடன், தம்மைக் கண்டதும் அவர்கள் ஓடிவிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

[quote]மண் வளம் சட்டத்திற்குப் புறம்பாக சூறையாடப்பட்டு, வௌி மாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான லொறிகளில் கொண்டு செல்லப்படுகின்றது. ஆறுகளில் மண் இல்லை. நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளர் கெமராக்கள் பறிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார். இன்றும் ஊடகவியலாளர்கள் வரும் போது அதற்கான ஆயத்தங்களை சிலர் செய்துகொண்டிருந்தார்கள். பின்னால் நாங்களும் பாதுகாப்புப் பிரிவும் வந்ததால் அவர்கள் ஏற்றிய மண்ணையும் ஆற்றிற்குள் விட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்கள். சட்டத்தின் பிரகாரம் அனுமதி பெற்றிருந்தால் ஓட வேண்டியதில்லை.[/quote]

என தெரிவித்தார்.

மேலும், கடந்த அரசாங்க காலத்திலிருந்த அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக இருந்தவர்கள் ஒவ்வொருவரும் 15 இற்கும் அதிகமான மண் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பதாகவும் எஸ்.வியாழேந்திரன் குறிப்பிட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் இருப்பவர்களும் கூட, சிலருக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குமாறு சிபாரிசுக் கடிதங்களை அனுப்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவெட்டுவான் ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சிலர் கடந்த 30 ஆம் திகதி நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கு.சுபோஜனின் கடமைக்கு இடையூறு விளைவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்