வித்தியா படுகொலை: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்

வித்தியா படுகொலை: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள விசாரணைகள்

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 7:51 pm

வித்தியா படுகொலை வழக்கின் விசாரணைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில், மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் மீண்டும் பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன.

கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டபோது நீதிமன்றத்தில் பிரசன்னமான பதில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, சுவிட்சர்லாந்திலுள்ள நிறுவனமொன்றுக்கு காணொளியை விற்பனை செய்வதற்காக புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அறிவித்தார்.

அத்தோடு, இந்த கொலையின் முக்கிய சூத்திரதாரி, சுவிஸ் குமார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மாணவி வித்தியாவை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் காட்சிகளை நேரடியாக பதிவு செய்து, சர்வதேச நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்துடன் அவர் சுவிஸில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் பதில் சட்ட மா அதிபர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு நிறுவனத்துடன் அவர் ஒப்பந்தம் செய்திருந்ததாக யாழ். மேல் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இரண்டு தரப்பினரதும் சாட்சியப்பதிவு மேல் நீதிமன்றத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று வித்தியாவின் நினைவுகள் மாத்திரமே அவரது வீட்டில் நிறைந்துள்ளன.

கல்வியில் சிகரம் தொட்டு, குடும்பத்தின் விளக்காய் திகழ்வார் என சீராட்டி வளர்த்த தனது மகளின் நிழற்படத்திற்கு தீபமேற்றி வருகிறார் வித்தியாவின் தாய்.

வித்தியா செல்லமாக வளர்த்த நாய் தற்போதும் அவரது வீட்டில் உள்ளது.

பாடசாலையில் சிறந்து விளங்கிய வித்தியாவின் மறைவை அவருடன் ஒரே வகுப்பில் கல்விகற்ற நண்பர்களால் இலகுவில் மறந்துவிட முடியாது.

படிப்பில் மாத்திரமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் திறமையை வெளிப்படுத்திய மாணவி வித்தியாவின் உயிர் பறிக்கப்பட்டு வருடங்கள் பல கடந்துள்ளன.

ஒரு ஊடகவியலாளராகப் பரிணமித்து, சமூக அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பக் கனவுகண்ட மாணவி வித்தியாவை சமூகம் இழந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்