அர்ஜூன் அலோசியசிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு

அர்ஜூன் அலோசியசிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 8:15 pm

பேர்ப்பச்சுவல் வர்த்தகக் குழுமத்தின் அர்ஜூன் அலோசியஸ் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியம் வழங்கினார்.

ஆணைக்குழு நேற்று (06) விடுத்த அழைப்பாணையை அடுத்து அவர் இன்று அங்கு சென்றிருந்தார்.

நேற்று ஆணைக்குழுவில் செவிமடுக்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் மூலம் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான உள்ளக மற்றும் நிதிசார் தகவல்கள் அர்ஜூன் அலோசியசுக்கு முன்கூட்டியே கிடைத்துள்ளதாகத் தெரியவந்தது.

இன்று ஆணைக்குழுவில் ஆஜரான அர்ஜூன் அலோசியஸிடம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் 8 மணித்தியாலங்களுக்கு அதிகக்காலம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேனவின் சாட்சி விசாரணையின் பின்னர், தாம் அந்த நிறுவனம் சார்பில் ஆஜராகப் போவதில்லை என பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் பெர்னாண்டோ இன்று ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான கொள்வனவாளர் நுவன் சல்காது மற்றும் அந்நிறுவனத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப அதிகாரி சசித் தேவதந்திரி ஆகியோருக்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் படி பாதுகாப்பு வழங்குமாறு ஆணைக்குழு இன்று உத்தரவிட்டது.

அதன் படி, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாக்கும் பொலிஸ் பிரிவினால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

கசுன் பாலிசேன, அர்ஜூன் அலோசியசிடம் இருந்த கோப் குழுவின் அறிக்கையை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி தொலைபேசியில் தனக்கு அறிவித்ததாக நுவன் சல்காது இன்று ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

ரோசி சேனாநாயக்கவின் மகன் மூலம் கசுன் பாலிசேன, கோப் குழுவிற்கு வழங்கிய தகவல்களை அலோசியசுக்கு வழங்கியுள்ளதாக நேற்று செவிமடுக்கப்பட்ட தொலைபேசி உரையாடலின் போது தெரியவந்தது.

அர்ஜூன் அலோசியசுக்கு கிடைத்ததாகக் கூறப்படும் சில உள்ளகத் தகவல்கள் சரியான தகவல்கள் அல்லவென நுவன் சல்காதுவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.

பிழையான தகவல்கள் கிடைத்திருந்தால், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விலைமனுவைப் பெற்றுக்கொள்ள முடியாது என இதன்போது சட்ட மா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேனவிடம் அந்த நிறுவனம் பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங் மற்றும் W.M.மென்டிஸ் நிறுவனத்துடன் மேற்கொண்ட முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஆணைக்குழு இன்று நீண்ட நேரம் விசாரணை செய்தது.

இதன்போது, பாலிசேன நீண்ட விளக்கமொன்றை வழங்க முற்பட்ட போது, புலம்ப வேண்டாம் எனவும் பாலிசேனவின் விளக்கம் ஒரு நாடகத்தைப் போன்று உள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்