ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2017 | 7:42 pm

பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.

ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களால் நீடிக்குமாறு, ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அதன் செயலாளர் எச்.டபிள்யூ குணதாச தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரமளவில் ஜனாதிபதியின் பதில் கிடைக்குமென அவர் கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பாரியளவிலான முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேனவின் தலைமையிலான ஆணைக்குழுவின் ஐந்து நீதிபதிகள் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த ஆணைக்குழுவிற்கு 2000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துடன், அதில் 400 முறைப்பாடுகள் விசாரணைக்காக தெரிவு செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் கூறினார்.

இதில் 17 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டு ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் பரபரப்பை ஏற்படுத்திய பல முறைப்பாடுகளும் காணப்பட்டன.

01. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பிரசார விளம்பரங்களுக்காக, அரச          ஊடகங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு  தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்ஸவும் சாட்சியமளித்திருந்தார்.

02. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ரக்னா லங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டம் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டது.

03. ரக்னா லங்கா நிறுவனத்தின் ஆயுதங்கள் அவன்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயளலாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆணைக்குழு பல்வேறு சந்தர்ப்பங்களில் அழைத்து சாட்சியம் பதிவு செய்தது.

04. ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழா மோசடி தொடர்பிலும், ஆணைக்குழு விசாரணை நடத்தியது.

05. தேர்தல் காலத்தில் முறையற்ற விதத்தில் ஹெலிகொப்டர்களை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவிடம் ஆணைக்குழு சாட்சியம் பதிவு செய்தது.

06. அமைச்சரவையின் அனுமதியின்றி 2014ஆம் ஆண்டு, அரிசி இறக்குமதி செய்யப்பட்டதால் அரசாங்கத்திற்கு 1551 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பிலும் ஆணைக்குழு விசாரணை நடத்தியிருந்தது.

இலங்கையில் இடம்பெற்ற 17 பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு வந்த நிலையிலேயே ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருகின்றது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன் நிறுவனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட மட்டத்திலான செயற்றிட்டங்களின் போது இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே ஆணைனக்குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது.

ஆணைக்குழுவிற்கு கிடைத்த 120 முறைப்பாடுகள் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாணை நிறைவு செய்யப்பட்ட 6 குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கைகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக சட்ட மாஅதிபர் ஜயந்த ஜயசூரிய கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்