இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை

இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்பட எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2017 | 7:27 pm

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட பூர்த்தி விழா கொழும்பில் இன்று (03) நடைபெற்றது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விழாவிற்கு தலைமை தாங்கினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிக்குகள் அமைப்பு, கிளை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ,தொகுதி அமைப்பாளர்கள் உட்பட கட்சியின் அனைத்துத் தொகுதிகளினதும் உறுப்பினர்கள் விழாவில் பங்கேற்றிருந்தனர்.

மக்கள் அதிகாரம் சரியான திசையில் எனும் தொனிப்பொருளில் இம்முறை 66 ஆவது வருட பூர்த்தி நிகழ்வுகள் நடைபெற்றன.

வருட பூர்த்தி நிகழ்வின் போது ஜனாதிபதி உரையாற்றும் போது….

”இராணுவ வீரர்களுக்கு எதிராக செயற்பட எவருக்கும் இடமளியேன்” 

 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இதுவரையான பயணம் தொடர்பான தொகுப்பு…

1951ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி, எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

ஒரு வருட காலத்திற்குள் பிரதான எதிர்க்கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வலுப்பெற்றது.

1956 ஆம் ஆண்டு மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவை பிரதமர் கதிரையில் அமரச் செய்தது.

பிரதமர் பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதையடுத்து கட்சி சவாலை எதிர்கொண்டது.

எனினும், அந்த சவாலை பொறுப்பேற்ற அன்னாரின் மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதலாவது பெண் பிரதமராக சாதனை படைத்தார்.

தொடர்ந்து பல தேர்தல்களில் வெற்றிகளைப் பதிவு செய்த சுதந்திரக் கட்சி 1977ஆம் ஆண்டிற்கு பின்னர் இக்கட்டான நிலையை எதிர்நோக்கியது.

எவ்வாறாயினும், கட்சிக்குப் புதிய பலத்தை ஏற்படுத்தும் வகையில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசியலில் பிரவேசித்தார்.

இரண்டு பிரதமர்களின் புதல்வியான சந்திரிக்கா பண்டாரநாயக்க, 1994ஆம் ஆண்டு கட்சியை சரியான பாதையில் இட்டுச் சென்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற மஹிந்த ராஜபக்ஸ, கட்சியின் அடுத்த தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், இவரது பதவிக்காலத்தில் மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

2015 ஜனவரி 9 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்றதன் பின்னர், நாட்டின் அரசியலிலும் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட மறுநாளில் பிறந்த மைத்திரிபால சிறிசேன நிலையான அரசியல் கொள்கையுடன் இன்றுவரை மக்களுடன் இணைந்து செயற்படுகின்றார்.

13 வருடங்களாக கட்சியின் பொதுச் செயலாளாராக பதவி வகித்த அவர் தற்போது கட்சிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வருகின்றார்.

நாட்டிற்கும் உலகிற்கும் சிறந்த எடுத்துக் காட்டாக நல்லாட்சிக் கொள்கையைப் பின்பற்றி, அரசியல் அதிகாரத்தை தம்வசப்படுத்திய அவர் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கட்சியின் தலைமைத்துவத்தையும் சரிவர நிறைவேற்றுகின்றார்.

இலங்கை வரலாற்றில், மூன்று ஜனாதிபதிகளையும் நான்கு பிரதமர்களையும் உருவாக்கி மக்களின் பலத்தை நிரூபித்த முற்போக்கு சின்னமான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது 66ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்