Bestweb 2018
Bestweb 2018

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு

By Bella Dalima

13 Sep, 2017 | 8:55 pm

மத்திய அதிவேக வீதியின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பில் நியூஸ்பெஸ்ட் கடந்த சில தினங்களாக பல்வேறு தகவல்களை வௌிக்கொணர்ந்தது.

டைசே என்ற ஜப்பான் நிறுவனம் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் விலை மனு செயற்பாட்டின் போது தகைமை பெறாத ஃபுஜிட்டா நிறுவனத்துடன் ஒன்றிணைந்து திட்டத்தை முன்னெடுக்கும் முயற்சி தொடர்பிலும் நியூஸ்பெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது.

வக்கச்சீக்கு, பென்டா ஓஷன் மற்றும் டைசே ஆகிய மூன்று நிறுவனங்கள் இந்த நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன.

இதில் வக்கச்சீக்கு நிறுவனம் பாலங்களை மாத்திரம் நிர்மாணித்திருந்தது. பென்டா ஓஷன் என்பது கடல்சார் பொறியியல் நடவடிக்கைகளுக்கு காணிகளை நிரப்பும் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமாகும்.

இந்த இரண்டு நிறுவனங்களும் விலை மனு நிபந்தனையான வீதி நிர்மாணப் பணிகள் தொடர்பில் அனுபவத்தைக் கொண்டிருக்காததால், போட்டியின்றி டைசே நிறுவனம் தெரிவு செய்யப்பட்டது.

டைசே நிறுவனமும் பிணை வழங்குவதற்கு தவறியதால், விலை மனு செயற்பாட்டின் போது தகைமையை இழந்தது.

எவ்வாறாயினும், ஜப்பான் தூதரகம் இலங்கையிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நான்காவது பிரேரணையாக ஃபுஜிட்டா நிறுவனம் மனுத்தாக்கல் செய்தது.

எனினும், ஃபுஜிட்டா நிறுவனம் தகைமை பெறாததால் இறுதியில் டைசே நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, ஆரம்பம் முதல் டைசே நிறுவனம் மாத்திரம் ஒப்பந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதா என்ற சந்தேகம் எழுகின்றது.

டைசே நிறுவனம் விலை மனு மோசடியில் ஈடுபட்டதாகக் கடந்த பெப்ரவரி மாதம் ஜப்பானின் நியாயமான சந்தை ஆணைக்குழு குற்றம் சுமத்தியதாக சன்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

ஜப்பான் சட்டத்திற்கு அமைய, சர்வாதிகாரத்தைத் தடுக்கும் சட்டத்தை இந்த நிறுவனம் மீறியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டதுடன், இது தண்டனைக்குரிய குற்றம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

தனது வருடாந்த அறிக்கையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட டைசே நிறுவனம் கவலையையும் வௌியிட்டிருந்தது.

இதனைத் தவிர, ஃபுகுஓகா நகரில் பிரதான வீதியொன்று தாழிறங்கிய சம்பவம் தொடர்பிலும் டைசே நிறுவனம் விமர்சனத்திற்குள்ளானது.

டைசே நிறுவனம் சுரங்கப் பாதையொன்றை நிர்மாணிப்பதற்கான அகழ்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே வீதி தாழிறங்கியிருந்தது.

இதேவேளை, கொழும்பு ஹில்டன் ஹோட்டலின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் ஒரு மாடியைக் குறைவாக நிர்மாணித்ததாகவும் டைசே நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்காக 77 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது.

சுகாதார அமைச்சுக்காக ஒதுக்கப்பட்ட தொகை 163 பில்லியன் ரூபாவாகும்.

இதற்கமைய, தேசிய வரவு செலவுத் திட்டத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையை விட கூடுதலான தொகையை இந்த அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக ஒதுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய அதிவேக வீதியின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்காக சலுகை அடிப்படையில் ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடமிருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் கடனைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தது.

எனினும், உரிய சூழல் ஆய்வு அறிக்கை மற்றும் மக்களுக்கான நட்டஈடு செலுத்தும் முறைமை என்பன காணப்படாததால் அந்த வாய்ப்பு அற்றுப்போனது.

இதன் பிரதிபலனாக, இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வௌிநாட்டு வங்கிகளில் கடனைப் பெற்றுக்கொள்ள நேரிட்டது.

மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்காக கடும் நிபந்தனையின் பேரில் அதிக வட்டிக்கு ஜப்பானின் மிட்ஷுபிசி வங்கியிடம் கடனைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

பாடசாலை கட்டடங்களின்றி ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிரமத்தை எதிர்நோக்குகையில், பல போகங்களாக விவசாய செய்கையை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகையில், உரிய சுகாதார வசதியின்றி மேலும் பலர் அங்கலாய்க்கையில், பில்லியன் கணக்கில் பணத்தை செலவிட்டு அதிவேக வீதி அமைக்க வேண்டுமா?

இத்தகைய திட்டங்களுக்கு பணத்தை வீண் விரையம் செய்ததாலேயே கடந்த ஆட்சியை மக்கள் நிராகரித்தார்கள் என்ற உண்மையை உணர்ந்து, தீர்மானிக்க வேண்டும்.