Bestweb 2018
Bestweb 2018

பெருந்தோட்டங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக பிரதேச சபைகள் சட்டத்தில் திருத்தம்

பெருந்தோட்டங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக பிரதேச சபைகள் சட்டத்தில் திருத்தம்

By Bella Dalima

13 Sep, 2017 | 8:59 pm

பெருந்தோட்டப் பகுதிகளில் பிரதேச சபைகள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக, பிரதேச சபைகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் மொத்தமாக 337 உள்ளூராட்சி நிறுவனங்கள் உள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.

இதில் 272 பிரதேச சபைகளும் அடங்குகின்றன.

இந்த பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பெருந்தோட்டப் பகுதிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பு இதுவரை பிரதேச சபைகளுக்கு கிடைக்கவில்லை.

1987 ஆம் அண்டு பிரதேச சபைகள் சட்டத்தில் காணப்பட்ட சில சரத்துக்கள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரதேச சபைகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு பெருந்தோட்டப் பகுதிகளில் பிரதேச சபைகள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில், அமைச்சரவைப் பத்திரமொன்றை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பைசர் முஸ்தபா அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை மேற்கொள்ளவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

பெருந்தோட்டப் பகுதிகளில் பிரதேச சபைகள் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்திருந்தனர்.

இதற்கமைய, 30 வருடங்களாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாக்களித்து, தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்தாலும் அபிவிருத்திப் பணிகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவிய தடை நீங்கவுள்ளது.

புதிய சட்டத்திருத்தம் காரணமாக மத்திய, சப்ரகமுவ, ஊவா, தென், வட மத்திய, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நன்மையடையவுள்ளனர்.

இதேவேளை, மக்களுக்கு சிறந்த முறையில் சேவையை வழங்கும் நோக்கில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு கரிசனை செலுத்தியுள்ளது.

பல்வேறு தரப்பினராலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு இதற்கான ஏற்பாடுகளை ஆராய்ந்து வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.