குளப்பிட்டி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: சந்தேகநபர்கள் பிணையில் விடுவிப்பு

குளப்பிட்டி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு: சந்தேகநபர்கள் பிணையில் விடுவிப்பு

By Bella Dalima

Sep 14, 2017 | 3:47 pm

யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 05 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் மீதான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளதாலும், கடந்த 11 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாலும் அவர்களுக்கு பிணை வழங்க முடியும் என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் மன்றில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து சந்தேகநபர்களை நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய, சந்தேகநபர்கள் ஐந்து பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் ஐந்து சந்தேகநபர்கள் சார்பிலும் ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சரீரப் பிணையாளிகள் அனைவரும் நீதவான் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களான ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கொழும்பு தலைமையகத்தில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிக்குள் கையொப்பம் இட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் , சந்தேகநபர்களின் கடவுச் சீட்டுக்களை யாழ். நீதவான் நீதிமன்றப் பதிவாளரிடம் கையளிக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் நாட்டை விட்டு வௌியேறக்கூடாது எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்தனர்.

ஆரம்பத்தில் விபத்து என பொலிஸார் தெரிவித்த போதிலும் , பின்னர் சடலங்கள் மீது நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையின் போது துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனை அடுத்து, சம்பவ தினத்தன்று கடமையிலிருந்த ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=i9kxOiYHIHA” width=”560″ height=”315″]