மடகல தோட்ட அத்தியட்சகர் மக்களின் பணத்தை மோசடி செய்வதாகக் குற்றச்சாட்டு

மடகல தோட்ட அத்தியட்சகர் மக்களின் பணத்தை மோசடி செய்வதாகக் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 8:23 pm

கண்டி – பன்வில பகுதியில் உள்ள மடகல தோட்ட அத்தியட்சகர் மக்களின் பணத்தை மோசடி செய்வதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உதவி தோட்ட அத்தியட்சகர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

மடகல தோட்டத்தின் நான்கு பிரிவுகளிலும் 1500 க்கும் அதிகமான குடும்பங்களைச் சோ்ந்த மக்கள் வாழ்கின்றனர்.

தோட்டத்தில் 1994 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கூட்டுறவுக் கடைக்கு மக்களிடம் இருந்து மாதாந்தம் 110 ரூபா அறிவிடப்படுகிறது.

மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் இந்தப் பணம் மீண்டும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டாலும் இங்கு மோசடி இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்தனர்.

1991 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 7 பேர் இங்கு தோட்ட அத்தியட்சகராக செயற்பட்டுள்ளனர்.

தற்போதுள்ள தோட்ட அத்தியட்சகர் பணத்தை மோசடி செய்து 23 இலட்சம் ரூபா பெறுமதியான கார் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தினர்.

இந்த விடயம் தொடர்பில் பன்வில பொலிஸாரிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

ஆகல தோட்டத்தொழிலாளர்களுக்கும் தோட்ட அதிகாரிக்கும் இடையில் நீண்டகாலமாக பிரச்சினை நிலவி வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஏற்கனவே இவர்களிடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, பாரிய நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரம் தமக்கு இல்லை எனவும் பன்வில பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்