திருப்பெருந்துறையில் குப்பைகளைக் கொட்ட நீதிமன்றம் தடை உத்தரவு

திருப்பெருந்துறையில் குப்பைகளைக் கொட்ட நீதிமன்றம் தடை உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2017 | 8:31 pm

மட்டக்களப்பு – திருப்பெருந்துறை பகுதியில் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை குப்பைகளைக் கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பெருந்துறை பகுதி மக்களால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் வகையில் நீதவான் மா.கணேசராஜா தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய, திருப்பெருந்துறை பகுதியில் மட்டக்களப்பு மாநகர சபையூடாக சேகரிக்கப்படும் கழிவுகளையோ அல்லது தனிப்பட்ட ரீதியிலோ எவரும் குப்பைகளைக் கொட்டக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தின் அருகில் வசித்த மக்கள் திருப்பெருந்துறை மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து தொடர் கவனயீர்ப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவர்களின் பிரச்சினை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்