மண்டைத்தீவில் உயிரிழந்த மாணவர்களில் மூவரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன

மண்டைத்தீவில் உயிரிழந்த மாணவர்களில் மூவரின் இறுதிக்கிரியைகள் நடைபெற்றன

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2017 | 9:50 pm

யாழ்ப்பாணம் – மண்டைத்தீவில் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 6 மாணவர்களில், மூவரின் இறுதிக்கிரியைகள் இன்று நடைபெற்றன.

யாழ்ப்பாணம் – அத்தியடி பகுதியைச்சேர்ந்த, கோணேஸ்வரன் பிரவீனின் பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

20 வயதான பிரவீன், யாழ். பெரியபுலம் மகா வித்தியாலயத்தின் மாணவராவார்.

கோம்மையன் மணல் இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை, உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த லிங்கநாதன் ரஜீவின் இறுதிக்கிரியைகளும் இன்று இடம்பெற்றன.

18 வயதான ரஜீவ், யாழ். பரியோவான் கல்லூரியின் மாணவராவார்.

பிற்பகல் 1 மணிக்கு இறுதிக்கிரியைகள் இடம்பெற்று, உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

சண்டிலிப்பாயைச்சேர்ந்த 17 வயதான புலேந்திரன் தனுஷனின் இறுதிக்கிரியைகளும் இன்று நடைபெற்றன.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைத்தீவு பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்தனர்.

வள்ளம் கவிழ்ந்ததில் உயிரிழந்த ஏனைய மூவரின் இறுதிக்கிரியைகள் நாளை (31) இடம்பெறவுள்ளன.

உயிரிழந்த மாணவர்களின் உடல்களிலிருந்து சில மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக எடுத்துச்செல்லப்பட்டதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நேற்று தெரிவித்திருந்தார்.

உயிரிழப்பதற்கு முன்னர் அவர்கள் ஏதேனும் உட்கொண்டார்களா என்பதை பரிசோதனை முடிவுகளின் பின்னரே உறுதிப்படுத்த முடியும் எனவும் வைத்தியர் குறிப்பிட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்