வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுப்பு

வடக்கு, கிழக்கில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2017 | 9:45 pm

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மக்கள் பிரதிநிதிகளும் வவுனியாவில் இன்று பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

கவனயீர்ப்புப் போராட்டம் ஏ9 வீதியூடாக, 188ஆவது நாளாக போராட்டம் நடத்தப்படும் இடத்தைச் சென்றடைந்து, வவுனியா நகர மண்டபம் வரை முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டேர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவிலும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

நகர மத்தியிலிருந்து மாவட்ட செயலகம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டு, கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இதேவேளை, தமது போராட்டத்தைப் பயன்படுத்தி சிலர் அரசியல் இலாபமடைவதாகத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசியல்வாதிகளுடன் முரண்பட்டனர்.

இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் பேரணி நடத்தப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான பேரணி, ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

யாழ். நல்லூரிலும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

நல்லூரிலிருந்து யாழ். நகரூடாக நாவல் வீதியை சென்றடைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டு வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்திற்கு முன்பாக பேரணியை ஆரம்பித்தனர்.

பொது வைத்தியசாலை வழியாக சென்ற பேரணி, மன்னார் நகரை சென்றடைந்து கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாகவும் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த கணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்