20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வட மத்திய மாகாண சபை அனுமதி

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வட மத்திய மாகாண சபை அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 8:41 pm

மாகாண சபை தேர்தல் திருத்த சட்டமூலம் அரசியல் அமைப்பிற்கு அமைவானது என சபாநாயகர் பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.

அத்துடன், சட்டமூலம் உயர்நீதிமன்றத்தின் விதிமுறைகளுக்கு உடன்பட்டது அல்ல எனவும் அரசியலமைப்பின் நியாயமான உரிமைகள் தொடர்பிலான 12 / 4 சரத்தின் விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது என்பதையும் சபாநாயகர் அறிவித்தார்.

இதேவேளை, மாகாண சபை தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கு விதிமுறைகள் காணப்படும் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு வடமத்திய மாகாண சபை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

வட மத்திய மாகாண சபை இன்று காலை கூடிய சந்தர்ப்பத்தில் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

20 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு தாம் கால அவகாசம் கோரிய போதிலும், அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபைக்கு அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற்றதுடன், ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.

அதன் பிரகாரம், 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் மேலதிக இரண்டு வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் சபையில் இருக்கவில்லை என நியூஸ்பெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்