வித்தியா படுகொலை: லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

வித்தியா படுகொலை: லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

22 Aug, 2017 | 3:33 pm

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக அறிவிக்கப்பட்டுள்ள சுவிஸ் குமாரை காப்பாற்ற முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு இதன்போது அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு வருவதால் அவருக்கு பிணை வழங்கக்கூடாது என அரச தரப்பு சட்டத்தரணி நிஷான் நாகரட்ணம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் சந்தேகநபரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, வித்தியா கொலை சம்பவத்துடன் தொடர்புடைய உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஶ்ரீகஜன் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட சிசிடிவி காணொளிகளை மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஶ்ரீகஜன் இந்தியாவிற்கு செல்ல முயன்றபோது, விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் தொடர்பிலும் மன்றில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் உள்ளிட்ட ஐவரிடம் பெறப்பட்ட வாக்குமூலம் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

நேரமின்மை காரணமாக வாக்குமூலம் வழங்கமுடியாது என அவர் தெரிவித்ததாகவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து வாக்குமூலங்களையும் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்