புத்தளத்தில் 14 வயது சிறுவன்​ கொலை: 32 வயது இளைஞர் கைது

புத்தளத்தில் 14 வயது சிறுவன்​ கொலை: 32 வயது இளைஞர் கைது

எழுத்தாளர் Bella Dalima

21 Aug, 2017 | 6:26 pm

புத்தளம் – முந்தல், சமீரகம கிராமத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான்.

சிறுவனின் சடலம் குறித்த பகுதியிலுள்ள தென்னந்தோப்பிலிருந்து நேற்று (20) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கயிற்றினால் கழுத்து நெறிக்கப்பட்டு சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 32 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபராக அடையாளங்காணப்படட இளைஞர் நேற்று இரவு பிரதேச இளைஞர்களினால் தாக்கப்பட்டதை அடுத்து, பொலிஸ் பாதுகாப்பில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

14 வயதான சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரும் நேற்று காலை அப்பகுதியிலுள்ள தென்னந்தோப்பிற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை வரை சிறுவன் வீடு திரும்பாததால், குறித்த இளைஞரிடம் சிறுவனின் உறவினர்கள் அது பற்றி கேட்டபோது, சிறுவன் ஏற்கனவே வீடு திரும்பிவிட்டதாகக் கூறியுள்ளார்.

பின்னர் பிரதேச மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இரவு 7 மணியளவில் குறித்த சிறுவன் தென்னந்தோப்பில் ஓலைகளுக்கிடையில் உயிரிழந்த நிலையில் அவதானிக்கப்பட்டுள்ளான்.

அதனைத் தொடர்ந்து சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் காலை வரை குறித்த இடத்திலேயே வைக்கப்பட்டிருந்ததுடன், காலை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்களின் உதவியுடன் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது

புத்தளம் மாவட்ட பதில் நீதவான் எம். பஸால் மரண விசாரணைகளை ஆரம்பித்ததுடன், பிரேதத்தை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்