நல்லையம்பதி நாயகனின் இரதோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது

நல்லையம்பதி நாயகனின் இரதோற்சவம் வெகுவிமர்சையாக நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

20 Aug, 2017 | 6:53 pm

வரலாற்றுப் பெருமையும், ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் முருகப் பெருமானின் இரதோற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நல்லூர் கந்தன், தேரேறி திரு வீதி வலம் வரும் அழகு காண்பதற்காய், இலட்சக்கணக்கான பக்தர்கள் திருத்தலத்தில் இன்று கூடியிருந்தனர்.

முத்தமிழால் வையகத்தாரையும் வாழ வைக்கின்ற முருகன் சித்திர தேரிலே அழகுத்திருக்கோலமாக பவனி வருகின்ற காட்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று நல்லையம்பதியில் கூடினர்.

அதிகாலையிலே பூஜைகள், அபிஷேகங்கள், வசந்தமண்டப பூஜை ஆகியன காலக் கிரமமாக முருகப்பெருமானுக்கு நடைபெற்றன.

ஆலயத்தின் அசையா மணிகள் ஆறும் ஒருங்கே ஒலிக்க முருகப்பெருமன் தேரேறி வீதியுலா வருதற்கு புறப்பட்டார்.

சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய திருத்தேரில் முருகப்பெருமான், கஜவள்ளி, மகாவள்ளி, சமேதாராக எழுந்தருளி வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் புரிகின்ற காட்சி கொள்ளையழகு.

பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முருகப்பெருமான் கம்பீரமான தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாட்சி புரிந்தார்.

கந்தன் புகழ்பாடும் பஜனைகோஷ்டிகளின் பாமாலை ஒலி பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

கைதான் தலைமேல் வைத்து கண்ணீர் ததும்பி கந்தப்பெருமானை அடியார்கள் வழிபடுதல் கண்கொள்ளாக் காட்சியாகும்.

பாற் காவடிகள், பறவைக்காவடிகள், கற்பூரசட்டிகள், அங்கப்பிரதஸ்டனம், சிதறுதேங்காய் உடைத்து அடியார்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த பக்தர்களும், நாளொரு அழகுபெரும் நல்லைக்கந்தனின் திருவீதி வலம் கண்டு இன்புற்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்