நல்லையம்பதி மகோற்சவப் பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா

நல்லையம்பதி மகோற்சவப் பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா

எழுத்தாளர் Staff Writer

19 Aug, 2017 | 7:51 pm

ஈழத்தின் குடும்ப விழாவான நல்லையம்பதி மகோற்சவ பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா கொண்டாடப்பட்டது.

வீதி உலாவரும் கோபுரக் கோயிலான சப்பரத்திலே எம்பெருமான் வள்ளிநாச்சி, தெய்வானை அம்பாள் சமேதராய் வலம் வந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு அருளாசி புரிந்தார்.

22 நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரானின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 23 ஆம் நாளாகிய இன்று சப்பரத் திருவிழா இடம்பெற்றது.

அழகால் அலங்காரக் கந்தன் என்றும் இளமையால் குமரன் என்றும் அழைக்கப்படும் நல்லூர்க் கந்தன் வள்ளி தெய்வானை சமேதராய், பழமை வாய்ந்ததும் மிக உயரமானதுமான அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மங்கள வாத்தியங்கள் முழங்க வீதியுலா வந்தார்.

கண்டம் கடந்து சர்வதேச நாடுகளில் வாழும் தாயக மக்கள், சொந்த மண் திரும்பி குடும்ப விழாவாக கொண்டாடும் நல்லைக் கந்தனின் மகோற்சவத்தின் சப்பரத் திருவிழாவில் இன்றைய தினமும் கலந்துகொண்டனர்.

நாள் ஒரு அழகு பெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவத்தில் நாளை இரதோற்சவத் திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்