பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் இரண்டு ஆண்டு கால இலாபப்பங்கீடு ஆணைக்குழுவில் அம்பலம்

பேர்ப்பச்சுவல் நிறுவனத்தின் இரண்டு ஆண்டு கால இலாபப்பங்கீடு ஆணைக்குழுவில் அம்பலம்

எழுத்தாளர் Bella Dalima

17 Aug, 2017 | 8:37 pm

கடந்த இரண்டு வருடங்களாக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் ஈட்டிய இலாபப் பங்கீடுகளுக்கு என்ன நேர்தது என்பது தொடர்பான தகவல்கள் முறிகள் விசாரணை ஆணைக்குழுவில் இன்று வெளியாகியுள்ளன.

பேர்ப்பச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனம் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நிறுவனமாகும்.

இந்த நிறுவனம் பேர்ப்பச்சுவல் பொசிட்டிவ் ப்ரப்பர்டீஸ் எனும் பெயரில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி கசுன் பாலிசேனவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போதே இதுதொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

2016 ஆம் ஆண்டில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தினால், பேர்ப்பச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இலாபப் பங்குகள் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த காலப்பகுதியில் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் அரச முறிகளில் முதலீடு செய்திருந்ததுடன், தேசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 1.1 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளைக் கொள்வனவு செய்திருந்தது.

2016 நவம்பர் மாதமளவில் பேர்ப்பச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனம் தமக்குரித்தான பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு 348 மில்லியன் ரூபா இலாபப் பங்குகளை வழங்கியுள்ளதாகவும் ஆணைக்குழு முன்னிலையில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் பேர்ப்பச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனத்திற்கு உரித்தான ஒரு நிறுவனம் என்பது நேற்று தெரியவந்தது.

பேர்ப்பச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனம், பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு நிறுவனமாகும்.

பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் நிறுவனம், அர்ஜுன் அலோசியஸ் மற்றும் ஜெஃப்ரி அலோசியஸ் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனமாகும்.

இதேவேளை, பேர்ப்பச்சுவல் அஸட் மெனேஜ்மென்ட் நிறுவனம் 642 . 69 மில்லியன் ரூபாவை பேர்ப்பச்சுவல் ஈக்விட்டீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

பேர்ப்பச்சுவல் ஈக்விட்டீஸ் நிறுவனம் – தேசிய அபிவிருத்தி வங்கி, சென்ட்ரல் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை அசோக் லேலண்ட் நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளிலும் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

கசுன் பாலிசேன வழங்கியுள்ள தகவல்களின் பிரகாரம், பேர்ப்பச்சுவல் ஈக்விட்டீஸ் நிறுவனம் பங்குச் சந்தையின் ஒரு தரப்பினராக செயற்படுகின்றமையும் தெரியவந்துள்ளது.

பேர்ப்பச்சுவல் ஃபண்ட் மெனேஜ்மென்ட் எனப்படும் மற்றுமொரு நிறுவனமும் உள்ளதுடன், அதன் மூலம் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுவதில்லை என கசுன் பாலிசேன ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கூறியுள்ளார்.

பேர்ப்பச்சுவல் குழுமத்தினால், தேசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து சுமார் 2 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

கசுன் பாலிசேனவின் சாட்சி விசாரணைக்குரிய பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 2,40,000 ஒலிப்பதிவுகள் மற்றும் பெரும் எண்ணிக்கையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஆவணங்களை சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக இன்று அறியக்கிடைத்துள்ளது.

இந்த விடயங்களை கவனத்திற்கொண்டு சட்ட மா அதிபர் திணைக்களம், ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி ஆணைக்குழு இன்று ஏற்றுக்கொண்டது.

சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்த விவகாரம் தொடர்பில் மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை ஆணைக்குழு இன்று பாராட்டியுள்ளது.

இதேவேளை, W.M.மென்டிஸ் நிறுவனம், தமது 12 வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்களை ஆணைக்குழுவிற்கு இன்று வழங்கியுள்ளது.

நிறுவனக் கணக்குகளில் உள்ளடக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்களை, அந்த நிறுவனத்தின் சட்டத்தரணிக்கு தெளிவுபடுத்திய ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட சகல தகவல்களையும் இந்த வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்