அரச பிணையங்கள் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் ஊடாக W.M. மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை அம்பலம்

அரச பிணையங்கள் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் ஊடாக W.M. மென்டிஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை அம்பலம்

எழுத்தாளர் Bella Dalima

16 Aug, 2017 | 9:53 pm

உண்மையைக் கண்டறிவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தெரிவித்தது.

உண்மையைக் கண்டறியும் விடயத்தில் தாம் எவருக்கும் வௌ்ளை சாயம் பூசுவதில்லை எனவும் எவரையும் பின் தொடர்வது இல்லை எனவும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று குறிப்பிட்டது.

தம்மிடம் முன்வைக்கப்படும் விடயங்கள் உண்மையானவை என தாம் உடனே ஏற்றுக்கொள்வது இல்லை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க மற்றும் பேர்ப்பச்சுவல்ஸ் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தின் போது ஆணைக்குழு சுட்டிக்காட்டியது

இதேவேளை, தான் W.M. மென்டிஸ் நிறுவனம் மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி சார்பில் ஆஜராகுவதாக அர்ஜூன் அலோசியஸ் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன இன்று ஆணைக்குழுவில் அறிவித்தார்.

W.M. மென்டிஸ் நிறுவனத்தின் கணக்காய்வு அறிக்கை , வங்கிக் கணக்கு பத்திரங்கள் மற்றும் வங்கி அறிக்கை என்பவற்றை இன்றைய தினம் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு கடந்த வாரம் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் அதனை செய்வது கடினமான விடயம் என சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன குறிப்பிட்டார்.

தாம் W.M. மென்டிஸ் நிறுவனத்திற்கு தகவல்கள் வழங்குவதற்கு வழங்கிய காலத்தினை கருத்திற்கொண்டு இன்றைய தினத்திற்குள் அந்த தகவல்களை வழங்க வேண்டும் என ஆணைக்குழு சட்டத்தரணிக்கு குறிப்பிட்டது.

அவ்வாறு வழங்க முடியாவிட்டால் இன்றைய தினத்திற்குள் நீண்ட விளக்கத்தை வழங்க வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியது.

அவ்வாறு செய்யாவிட்டால் தம்மால் தீர்மானம் ஒன்றிக்கு செல்ல வேண்டி ஏற்படும் எனவும் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று தெரிவித்தது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப, அரச பிணையங்கள் W.M. மென்டிஸ் நிறுவனத்திற்கு பரிமாற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் உள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மிலிந்த குணதிலக்க ஆணைக்குழுவில் குறிப்பிட்டிருந்தார்.

ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு ஏற்ப குறித்த காலத்திற்குள் அரச பிணையங்களின் பரிமாற்றம் தொடர்பில் ஆராயும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக இதன்போது சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தபுல டி டிவேரா தெரிவித்தார்.

இதேவேளை, பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் இலாபப்பங்குகள் தொடர்பில் இன்று ஆணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

2014ஆம் ஆண்டில் இருந்து 2016 ஆம் ஆண்டு வரை பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் இலாபப்பங்கீடு 712 மில்லியன் ரூபா என இதன்போது தெரிய வந்தது.

தாம் பேர்ப்பச்சுவல் அஸட் மனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக செயற்பட்டாலும் இலாபப்பங்கீட்டிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் தன்னால் கூற முடியாது என பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன குறிப்பிட்டார்.

பேர்ப்பச்சுவல் அஸட் மனேஜ்மென்ட் நிறுவனத்திற்கே பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சொந்தமானது என்பது இன்று ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்தது.

பேர்ப்பச்சுவல் அஸட் மனேஜ்மென்ட் நிறுவனம் பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது.

பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் நிறுவனத்திற்கு சொந்தமானது.

பேர்ப்பச்சுவல் கெப்பிட்டல் நிறுவனம் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் ஜெஃப்ரி அலோசியஸூக்கு சொந்தமானது .

இலாபப்பங்கீடு எவ்வாறு இடம்பெற்றது என்பதனை அறிந்துகொள்ளும் தேவை ஆணைக்குழுவிற்கு உள்ளதாகவும் இன்று அறிவிக்கப்பட்டது.

அது குறித்து ஆணைக்குழுவிற்கு அறிவிப்பது தமது பொறுப்பு என கசுன் பாலிசேனவிற்கு ஆணைக்குழு அறிவித்தது.

இந்த கோரிக்கையின் பாரதூரத்தை அறிந்து செயற்படுமாறு ஆணைக்குழு இன்று அறிவித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்