மடு மாதாவின் விண்ணேற்புத் திருவிழாவிற்கு மழை இடையூறு

மடு மாதாவின் விண்ணேற்புத் திருவிழாவிற்கு மழை இடையூறு

எழுத்தாளர் Bella Dalima

14 Aug, 2017 | 6:33 pm

மன்னார் – மடு ஆலயத்தில் நாளை (15) நடைபெறவிருந்த மடு மாதாவின் விண்ணேற்புத் திருவிழாவை கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாகக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதேசத்தில் நிலவியுள்ள கடும் மழையுடனான வானிலை காரணமாக மடு ஆலய வளாகம் உட்பட அண்மித்த பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், திருவிழாக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ். எமிலியானுஸ் பிள்ளை தெரிவித்தார்.

மன்னார் அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையிலான குருக்கள் குழு இன்று பிற்பகல் தீர்மானங்கள் சிலவற்றை எடுத்துள்ளது.

விசுவாசிகள் தங்கியுள்ள ஆலய வளாகம் மற்றும் அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால், வழக்கமான வழிபாடுகள் நடைபெறுவது சாத்தியமற்றதால் மாலை நடைபெறவிருந்த வழிபாடு நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், வானிலை மாற்றங்கள் அவதானிக்கப்பட்டு நாளை திருநாள் திருப்பலி பற்றிய விபரங்களை உரிய நேரத்தில் அறிவிப்பதற்கும் குருக்கள் குழு தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து, மடு மாதா விண்ணேற்புத் திருவிழாவிற்காக வருகை தந்திருந்த விசுவாசிகள் மீண்டும் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்வதாகவும் மடு ஆலய பரிபாலகர் மேலும் தெரிவித்தார்.

வருடந்தோறும் ஆவணி 15 ஆம் நாள் நடைபெறும் மடு மாதா விண்ணேற்புத் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ விசுவாசிகள் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்