பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவை செயலிழக்கச் செய்ய முயற்சி: சிலோன் டுடே பத்திரிகையில் செய்தி

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவை செயலிழக்கச் செய்ய முயற்சி: சிலோன் டுடே பத்திரிகையில் செய்தி

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2017 | 9:10 pm

பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிலோன் டுடே பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டிருந்தது.

நிதிக்குற்ற விசாரணைப்பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் குற்றவியல் விசாரைணைப்பிரிவு மற்றும் இலஞ்ச ஊழல் விசாரணைக்குழுவிற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி சிலோன் டுடே செய்தி வௌியிட்டுள்ளது.

முக்கிய நபர்கள் மற்றும் குற்றவியல் விசாரணை தொடர்பான 62 கோவைகள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை என சிலோன் டுடே பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

நிதிக்குற்றவியல் விசாரணைப்பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளின் ஆளுமையை முழுமையாகப் பயன்படுத்தாமல்
62 இற்கும் அதிகமான சம்பவங்கள் தொடர்பான கோவைகள் தொடர்ந்தும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் தேங்கிக் கிடப்பதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பான கோவைகள் சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டாலும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அந்த அதிகாரி சிலோன் டுடே பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட சில ஆவணங்கள் இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான ஆலோசனைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை வங்கியின் கிளையொன்று, ஷீசெல்சில் ஆரம்பிக்கப்பட்டு அந்நாட்டு நிறுவனங்களுக்கு நிதி அனுப்பிய சம்பவங்களும் இதில் உள்ளடங்குகின்றன.

முன்னாள் ஜனாதிபதியின் செயற்குழு பிரதம அதிகாரி காமினி செனரத் தொடர்பான வழக்குக் கோவைகளும் இதில் உள்ளடங்குகின்றன.

அத்துடன், என்.லொக்குவிதான என்ற வர்த்தகருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையிலிருந்த தொடர்புகள் மற்றும் 48 மில்லியன் 190 மில்லியன் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் குறித்த வழக்குகளும் இதில் உள்ளடங்குவதாக சிலோன் டுடே பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

முட்டைகளை அடைகாப்பது போன்று சிறிய வழக்குகளுக்கும் அதிக காலம் எடுப்பதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் ரஷ்யத் தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பில் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவு கரிசணை கொள்ளவில்லை எனவும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் உத்தரவின்படி அதற்கான விசாரணைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அந்த சிரேஷ்ட அதிகாரி சிலோன் டுடே பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் இந்த விடயங்கள் தொடர்பில் வினவுவதற்கு முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை எனவும் சிலோன் டுடே பத்திரிகை தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்