நீர்கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான இருவர் பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்கள்

நீர்கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான இருவர் பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினர்கள்

எழுத்தாளர் Staff Writer

13 Aug, 2017 | 4:51 pm

நீர்கொழும்பு குரண பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள், பாதாள உலகக் கோஷ்டியின் உறுப்பினர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

காயமடைந்த இருவர் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்களை ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்களுடன் சந்தேகநபர்கள் நீர்கொழும்பு பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததது.

இதன் பிரகாரம், அவர்களைக் கைதுசெய்ய முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர்கள் நடத்திய பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு சந்தேகநபர்கள் காயமடைந்தனர்.

சந்தேகநபர்களிடம் இருந்த இரண்டு ரி_56 ரக துப்பாக்கிகளும், 3 மெகசின்களும், 54 ரி_56 ரக தோட்டக்களும், சீன தயாரிப்பான கைத் துப்பாக்கி ஒன்றும், 9 மில்லிமீற்றர் ரக 7 தோட்டாக்களும், மூன்று போலி இலக்கத் தகடுகளும், 6 கையடக்கத் தொலைபேசிகளும், டொல்பின் ரக வெள்ளைநிற வேன் ஒன்றும் நீர்கொழும்பு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக விசேட அதிரடிப் படையினர் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்தில் பாதாள கோஷ்டியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களே காயமடைந்ததாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கடற்படையிலிருந்து விலகிய, ஜனக அருணஷாந்த என்ற தெல்தெனிய பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம பகுதியைச் சேர்ந்த தரிந்து மதூஷ என்ற 31 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தின்போது காயமடைந்த சந்தேகநபர்களில் ஒருவர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த மற்றைய சந்தேகநபர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்